நெல்லை, குமரி, தூத்துக்குடிக்கு 5 பெண் எம்எல்ஏ-க்கள்!

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 2016இல் பெற்ற வெற்றி மூலம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடிக்கு 5 பெண்கள் சட்டப் பேரவை உறுப்பினர்களாகியுள்ளனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 2016இல் பெற்ற வெற்றி மூலம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடிக்கு 5 பெண்கள் சட்டப் பேரவை உறுப்பினர்களாகியுள்ளனர். குறிப்பாக கடந்த 2011இல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஒரு பெண் எம்எல்ஏ கூட கிடைக்கவில்லை. இந்த மூன்று மாவட்டங்களிலும் கடந்த 2011 பேரவைத் தேர்தலில் பத்மநாபபுரத்தில் திமுக-வைச் சேர்ந்த புஷ்பா லீலா ஆல்பன் எம்எல்ஏ ஆக வெற்றி பெற்றார். விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி எம்எல்ஏ ஆக வெற்றி பெற்றார்.  சங்கரன்கோவில் தனித் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலால் கூடுதலாக ஒரு பெண் எம்எல்ஏ (அதிமுக- முத்துச்செல்வி) கிடைத்தார். இருப்பினும், பொதுத்தேர்தல் வரலாற்றில் 2011இல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 2 பெண் எம்எல்ஏ என்ற நிலை இருந்தது. இப்போது, 5 பெண் எம்எல்ஏ-க்கள் கிடைத்துள்ளனர்.

இந்த மூன்று மாவட்டங்களிலும், 2016 பேரவைத் தேர்தல் களத்தில் பிரதான கட்சிகளின் பெண் வேட்பாளர்களாக பலரும் போட்டியிட்டனர்.  விளாத்தி குளத்தில் அதிமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி, தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன், மதிமுக வேட்பாளர் பாத்திமா பாபு, ஶ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசன், சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளர் வி.எம். ராஜலட்சுமி, திமுக வேட்பாளர் க. அன்புமணி, தென்காசியில் பாஜக வேட்பாளர் பா. செல்வி, ஆலங்குளத்தில் அதிமுக வேட்பாளர் ஹெப்சி கார்த்திகேயன், திமுக வேட்பாளர் பூங்கோதை, அம்பாசமுத்திரத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் கற்பகவல்லி, பாஜக கூட்டணி வேட்பாளர் சசிகலா முருகேசன், ராதாபுரத்தில் பாஜக வேட்பாளர் கனி அமுதா, கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் மீனாதேவ், நாகர்கோவிலில் மதிமுக வேட்பாளர் கிறிஸ்டிராணி, பத்மநாபபுரத்தில் பாஜக வேட்பாளர் ஷிபா பிரசாத், விளவங்கோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி, கிள்ளியூரில் அதிமுக வேட்பாளர் மேரி கமலா பாய் என மொத்தம் 16 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறி்ப்பாக பாஜக-வில் மட்டும் 5  பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். இவைத்தவிர இதர கட்சிகளிலும், சுயேச்சைகளாகவும் பல்வேறு பெண்கள் தேர்தல் களம் கண்டனர்.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 5 பெண் எம்எல்ஏ-க்கள் கிடைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளத்தில் அதிமுக-வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, தூத்துக்குடியில் திமுக-வைச் சேர்ந்த பெ. கீதாஜீவன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். சங்கரன்கோவிலில் அதிமுக-வைச் சேர்ந்த வி.எம். ராஜலட்சுமி, ஆலங்குளத்தில் திமுக-வைச் சேர்ந்த பூங்கோதை வெற்றி பெற்றுள்ளனர். விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி வெற்றி பெற்றுள்ளார். இவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், தூத்துக்குடி, விளவங்கோட்டில் ஆண் வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர் பெண்கள். ஆலங்குளம், சங்கரன்கோவிலில் பெண்களால் அடுத்த வந்த பெண் வேட்பாளர்கள் வீழ்த்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. எதுவாக இருந்தாலும் இந்த முறை தென் மாவட்டங்களில் குறிப்பாக கடைக்கோடி மாவட்டங்களில் 5 பெண் வந்திருப்பதே பெருமைக்குரியது.

இதுகுறித்து, ஆலங்குளத்தில் வெற்றி பெற்ற பூங்கோதை கூறியது: அரசியல் களத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், தன்னம்பிக்கையும், கட்சியினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றினால் எதிலும் பெண்களுக்கு வெற்றி கிடைக்கும். சாதனை படைக்க முடியும். பல்வேறு தருணங்களில் தேர்தல் முடிவுகள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com