நெல்லை மாவட்டத்தில் குளங்களைக் காக்க களம் இறங்கிய காவல் துறை

திருநெல்வேலி மாவட்டத்தில் பராமரிப்பின்றி முள்புதர்கள் மண்டியுள்ள குளங்களைச் சுத்தப்படுத்தி நீரைத் தேக்கும் நடவடிக்கையில் மாவட்ட காவல் துறையினர் களம் இறங்கியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பராமரிப்பின்றி முள்புதர்கள் மண்டியுள்ள குளங்களைச் சுத்தப்படுத்தி நீரைத் தேக்கும் நடவடிக்கையில் மாவட்ட காவல் துறையினர் களம் இறங்கியுள்ளனர்.
நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதுடன், சுற்றுச் சூழலுக்கு பெரிதும் இடையூறாக உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அப்புறப்படுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி,நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை,வருவாய்த் துறை என பல்வேறு துறையினரும் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர்.
இதில் திருநல்வேலி மாவட்டக் காவல் துறையும் இணைந்துள்ளது. சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதுடன் நின்றுவிடாமல் குளங்களைச் சுத்தப்படுத்தி, முள்புதர்களை அகற்றி தண்ணீரைத் தேக்கும் வகையில் மராமத்துப் பணிகளையும் தொடங்கியுள்ளது.
இதன் தொடக்கமாக, தாழையூத்து பகுதியில் உள்ள குறிச்சிகுளத்தைத் தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன் தலைமையில்,ஆண், பெண் போலீஸார் 70-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து குளத்தில் மண்டிக் கிடந்த முள்கள், சீமைக் கருவேல மரங்கள்,அமலைச் செடிகளை அகற்றினர். மேலும்,ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய அளவிலான கருவேல மரங்களை வேருடன் அப்புறப்படுத்தி அம் மரங்களை தீ வைத்து எரித்தனர். குளத்துக்கு நீர்வரும் பாதைகளில் கிடந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
இதுதொடர்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் கூறியது:
காவல் பணியுடன் சமூகப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் பராமரிக்கப்படாமல் உள்ள குளங்களை கண்டறிந்து அவற்றை தூய்மைப்படுத்தி, புனரமைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம்.
வாரத்தின் இறுதி நாளில் ஒவ்வொரு பகுதியில் உள்ள குளத்தையும் தேர்வு செய்து இப் பணியைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பொதுமக்களும் காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com