"தமிழ் வட்டார வழக்கு சொல்அகராதியின் தந்தை கி.ரா.'

தமிழ் வட்டார வழக்கு சொல்அகராதியின் தந்தை கி.ரா. என்றார் எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன்.

தமிழ் வட்டார வழக்கு சொல்அகராதியின் தந்தை கி.ரா. என்றார் எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன்.
தேசிய வாசிப்பு இயக்கம், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் நடைபெற்றுவரும் "நெல்லை புத்தகத் திருவிழா 2019' இல், கி.ரா.வும் நானும்' என்ற தலைப்பில் அவர் பேசியது: 
கி. ராஜநாராயணன் அடிப்படையில் ஒரு விவசாயி. இடைச்செவல் என்ற கிராமத்தின் விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைச் சென்றவர். தனது 40 ஆவது வயதில் கடிதம் போல எழுதிக்கொண்டிருந்த விஷயத்தை சிறுகதையாக எழுதினார். அவ்வாறு எழுதிய கதை தான் புகழ்பெற்ற அவரது "கதவு' சிறுகதை. சுதந்திரம் அடைந்து வெள்ளி விழா கொண்டாடும் நேரத்திலும், வேட்டி கிழிந்து, மாற்றுவேட்டி இல்லாத தூங்கா நாயக்கரைப் பற்றிய கதை தான் "வேட்டி' சிறுகதை.
கரிசல் வட்டார மக்கள் பேசும் மொழியை கையாண்டு அவர் எழுதிய படைப்புகள் பரவலான வரவேற்பைப் பெற்றன. கரிசல் வட்டார வழக்கில் உள்ள சொற்களை தொகுத்து, கரிசல் சொல்லகராதி என்ற நூலை உருவாக்கினார். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணி அது. கோவில்பட்டியில் உள்ள பல்வேறு எழுத்தாளர்கள்  மாரிஸ், உதயசங்கர், சாரதி, திடவை பொன்னுச்சாமி, முருகன், நான் உள்ளிட்ட பலரும் அவரது இந்த முயற்சியில் உதவிசெய்தோம். 
சிறுவர் இலக்கியம் குறித்து இன்று பலரும் பேசிக்கொண்டிருக்கிறோம். அவரது "பிஞ்சுகள்" என்ற குழந்தைகள் குறுநாவலைப் போல ஒரு சிறுவர் படைப்பு மிக அரிதாகவே வரும். பள்ளிக்கூடம் போகாமல் காக்கா முட்டைகளையும், மைனா முட்டைகளையும் சேகரித்துக் கொண்டு இருக்கும் கிராமத்து சிறுவன் வெங்கடேசும், ரப்பர் வில்லுடன்  ஊருக்குள் அலையும் வயசாளி திரிவேதி நாயக்கரும் நண்பர்களாவது ஒரு வேடிக்கையான நிகழ்வு. இருவருக்கும் பறவைகளை பிடிக்கும். நாவல் முழுவதும் எத்தனை எத்தனை பறவைகளை அறிமுகப்படுத்துவார். 
போர்க்குணம் மிக்க வல்லயத்தான் பறவையை வேட்டைக்கு பழக்கிவிட்டால், அது அம்புபோல பறந்து போய்,  வானில் செல்லும் புறாக் கூட்டங்களை அடித்துப் போட்டுவிட்டு மீண்டும் நம்மிடமே வந்துவிடுமாம். பயிர், பச்சைகளை கெடுக்கும் பூச்சிப் புழுக்களை எல்லாம் பிடித்து தின்னும் பறவைகள் மனிதனுக்கு தோழன். அவற்றை நாம் கொன்று சாப்பிடக்கூடாது என்று சொல்வார் திரிவேதி நாயக்கர்.
நாம் சில சமயங்களில் பேசும்போது "அவன் நல்லா காக்கா பிடிக்கான்' என்று சொல்வோம். ஆனால், நிஜத்தில் காக்காய்களை பிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அழகாக விவரிப்பார் நாவலில். நாமும் பறவைகளை அன்றாடம் பார்க்கிறோம் என்றாலும், அவர் பார்வை வேறானது. பறவைகளில் ஒழுங்காக குளிப்பது காகங்களும், மைனாக்களும் தான் என்று சொல்கிறார். கொக்கு முழங்கால் வரை தான் தண்ணீரில் நனைக்கும். அதுகூட ஒருகாலை மட்டும் தான். மீன் கொத்தி மூக்கை மட்டுமே நனைக்கும் என்று பறவைகளுக்கும் தண்ணீருக்கும் உள்ள உறவைப் பற்றி சுவாரசியமாக சொல்லிச் செல்வார்.
நாவல் இறுதியில், கிராமத்து சிறுவன் வெங்கடேசு, மேலே படிக்க நகரத்து விடுதிக்கு செல்ல ரயில் வண்டியில் ஏறிப்போவது போல முடித்து இருப்பார். நாவல் முழுவதும் மரங்களைப் பற்றியும், பறவைகளைப் பற்றியும் பல்வேறு தகவல்கள் நிரம்பி இருக்கும். வலிந்து அறிவுரை சொல்லக்கூடிய நீதிபோதனை கதைகள் போல அன்றி, இயல்பாக சொல்வதே அவரது பாணி. 
ஆந்திரத்தில் இருந்து இஸ்லாமிய அரசர்களுக்கு பயந்து,  இடம்பெயர்ந்து வந்த தெலுங்கு குடும்பம் தமிழ்நாட்டில் கோபல்ல கிராமத்தில் குடியேறிய கதை "கோபல்ல கிராமம்'. கிராமத்தில் இருக்கும் மூத்த மங்கத்தாயாரு அம்மா, தனது நினைவில் இருந்து கூறும் கதையாக நாவல் விரிகிறது. கி.ரா.வின் மிகச் சிறந்த நாவல் இது.
இந்த தொண்ணூத்தி ஏழு வயதிலும், தனது கைப்பட நாவல் எழுதுகிறார். நண்பர்களுக்கு கடிதம் போடுகிறார். தொலைபேசியில் பேசுகிறார். இடைச்செவல் என்ற சிறிய கிராமத்தில் இருந்த இரண்டு நண்பர்களான கி.ரா.வும், கு. அழகிரிசாமியும், தேசத்தின் மிக உயர்ந்த இலக்கிய விருதான "சாகித்ய அகாதெமி" விருதை பெற்றிருக்கிறார்கள் என்பது மிகப் பெரிய விஷயம். தங்களது மண்ணிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். கரிசல் மக்களின் பண்பாட்டை தனது படைப்புகளில் வெளிக்கொணர்ந்த எழுத்தாளர் கி.ரா.-வின் எழுத்துப் பணி மேலும் தொடர வேண்டும். அவரது படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர். 
கருத்தரங்கை தொடர்ந்து, கவிஞர் சுப்ரா தலைமையில், தலைப்பில்லா கவிதைகள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் தானப்பன், பாப்பாக்குடி செல்வமணி, எஸ்.எஸ். பிரபு,  தச்சை மணி, சக்தி வேலாயுதம் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். விழா ஏற்பாடுகளை, தேசிய புத்தக வாசிப்பு இயக்க தலைவர் தம்பான், பொருளாளர் பாலாஜி ஆகியோர் செய்தனர்.
விழாவில், "தமிழ்ச்செம்மல்" கவிஞர் பேரா, கவிஞர் மஞ்சுளா, ஓவியர் சண்முகம், திருக்குறள் பிரபா, கிருஷ்ணன், கம்பன் கழகத் தலைவர் திரு சடகோபன், பாரதி கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com