பாழடைந்த நிலையில் ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகக் கட்டடம்: ஊழியர்கள் பற்றாக்குறையால் மக்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சியில்  சிதிலமடைந்த அலுவலகக் கட்டடம்,

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சியில்  சிதிலமடைந்த அலுவலகக் கட்டடம், நிரந்தர செயல் அலுவலர், போதிய ஊழியர்கள் இல்லாதது போன்ற பிரச்னைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தொகுதி, வருவாய் வட்டம், ஊராட்சி ஒன்றியம், காவல் உள்கோட்டம் ஆகியவற்றின் தலைமையிடமாக ஆலங்குளம் பேரூராட்சி உள்ளது. இங்கு, பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. 
12.29 சதுர கி.மீ. பரப்பளவுள்ள ஆலங்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 10 ஆயிரம் வீடுகளில் 32 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 3 கோடி அளவுக்கு வருவாய் உள்ளது. 
எனினும், பேரூராட்சி அலுவலகத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால், பல ஆண்டுகளாக அடிப்படைப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. பல ஆண்டுகளாக இங்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லை.  இதனால், பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பிறப்பு, இறப்புச் சான்றிதழ், கட்டட வரைபட சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை விரைவாகப் பெற இயலவில்லை.
10 ஆயிரத்திற்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் உள்ள நிலையில், குடிநீர் விநியோகம் செய்ய தொழில்நுட்பப் பொறியாளர்கள், பணியாளர்கள் இல்லை. இந்தப் பணிகளை துப்புரவுப் பணியாளர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து, சரிசெய்யப்படாமல் தெருக்களில் தண்ணீர் ஆறுபோல ஓடி வீணாகிறது. 
மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 9 பணியாளர்களே உள்ளனர். இவர்கள்தான், துப்புரவுப் பணிகள், குடிநீர் விநியோகம், அலுவலக உதவியாளர், வாகன ஓட்டுநர் என அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும். இந்தப் பிரச்னைகளால் ஆலங்குளத்தின் சுகாதாரம், வளர்ச்சி போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆலங்குளத்தை நகராட்சியாக மாற்றினால், ஆணையர் நியமிக்கப்படுவதுடன்,  அரசால் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்வதற்கும் வாய்ப்புள்ளதாக மக்கள் கருதுகின்றனர். 
மேலும், பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தின் மேற்கூரைகள் இடிந்த நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு குடிநீர் வரி செலுத்த வந்த முதியவரின் தலையில் ஜன்னல் சிலாப் உடைந்து விழுந்ததில் அவர் காயமடைந்தார். அதேபோல, கடந்த மாதம் பேரூராட்சி அலுவலகப் பகுதியில் நடைபெற்ற சாலை பணியின் போது, ரோடுரோலர் சென்றபோது அலுவலகத்தின் சில பகுதிகள் பெயர்ந்து விழுந்ததால், ஊழியர்கள் பயந்து அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கட்டடம் தற்போது பலமிழந்து வருவதால், விரைவில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும், புதிதாக அமையும் அலுவலகம் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில், பேருந்து நிலையத்திற்கு அருகே கட்டப்பட வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். 
இதுகுறித்து சமூக ஆர்வலர் பால்டேவிட் கூறியது: ஆலங்குளம் ஊராட்சியாக இருந்தபோது கட்டப்பட்ட கட்டடம் இப்போது சிறப்பு நிலை பேரூராட்சியாக மாறிய பிறகும் தொடர்கிறது. மிகவும் பழுதடைந்த இந்த அலுவலகக் கட்டடம், மிகக் குறுகலான சாலையில் அமைந்துள்ளதால், பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியவில்லை. எனவே, வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஆலங்குளத்தை நகராட்சியாக மாற்றுவதுடன், பாழடைந்த நிலையில் இருக்கும் பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) பெத்துராஜ் கூறுகையில், "பேருந்து நிலையத்தின் அருகே புதிய அலுவலகக் கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான செலவு ரூ. 1 கோடி வரை ஆகலாம். நகராட்சியாக மாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் தயார்செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் அந்தப் பணிகளும் தொடங்கும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com