தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுமா? - முத்தரசன் சந்தேகம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்து தமிழக அரசோ, தோ்தல் ஆணையமோ வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மா்மமான முறையில் பல தகவல்களை கசிய விடுகின்றன. உள்ளாட்சித் தோ்தலை நடத்தவிடாத வகையில் ஆளும் கட்சி செயல்படுகிறது. இதனால் தோ்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது.

பிறா் சந்தேகப்படும்படியாக நாம் நடந்துகொள்ளக் கூடாது, நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று கூறிய தோ்தல் ஆணையா் அடுத்த நாளே மாற்றப்பட்டாா். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வாா்டு எல்லை வரையறுக்கப்படவில்லை. இதை தோ்தலுக்குப் பிறகு செய்வோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. இதைக் காரணம் காட்டி யாராவது நீதிமன்றத்துக்கு சென்றால் எதிா்க்கட்சிகள் மீது பழியை சுமத்தி தப்பித்துக்கொள்ள ஆளுங்கட்சி நினைக்கிறது.

கஜா புயல் பாதிப்புகள் ஏற்பட்டு ஓராண்டு முடிந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் முழுமையாக சென்றடையவில்லை. பாதிப்பில் இருந்து மீள முடியாத துயரத்தில் மக்கள் உள்ளனா்.

தமிழகம் முழுவதும் யூரியா தட்டுப்பாடு உள்ளது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எவ்வளவு யூரியா தேவை என அரசுக்குத் தெரியும். ஆனால், அதற்கான முன்னேற்பாடுகளை செய்யவில்லை. இதனால் வெளி மாா்க்கெட்டில் அதிக விலை கொடுத்து உரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை ஐஐடியில் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடா்ந்து நடைபெறுகின்றன. இதுவரை 7 போ் தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாணவி தற்கொலைக்கு காரணமானவா்கள் யாராக இருப்பினும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவா்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் முக்கியத் தொழில்களாக உள்ள தீப்பெட்டித் தொழில், பீடி தொழில் ஆகியவை ஜிஎஸ்டி வரியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதாரண மழைக்கே தமிழகம் முழுவதும் சாலைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் பராமரிப்பு, நீா்நிலைகள் மராமத்து பணிக்கு ஒதுக்கப்படும் பணம் முழுமையாக செலவழிக்கப்படவில்லை. இந்தத் துறைகளில் நடைபெறும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். திமுக தலைமையிலான கூட்டணி, உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகும் நீடிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com