தச்சநல்லூரில் பள்ளி அருகே குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்! ஓடையை தூர்வாராததால் அவதியுறும் மக்கள்

தச்சநல்லூரில் பள்ளியின் அருகே குளம் போல கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் மற்றும் நோய்க் கிருமிகளால்
தச்சநல்லூரில் பள்ளி அருகே குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்! ஓடையை தூர்வாராததால் அவதியுறும் மக்கள்

தச்சநல்லூரில் பள்ளியின் அருகே குளம் போல கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் மற்றும் நோய்க் கிருமிகளால்  மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வாறுகால்களைத் தூர்வாராமல் அலட்சியத்தோடு செயல்படும் மாநகராட்சியால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் தச்சநல்லூர் மண்டலத்தின் கீழ் உள்ள ஒன்றாவது வார்டில் தச்சநல்லூர் வாலாஜாபேட்டை தெருக்கள், செல்வவிக்னேஷ்நகர் குடியிருப்புகள் உள்ளன. இங்கு 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. திருநெல்வேலி நகரம் வழியாக வரும் திருநெல்வேலி கால்வாய் தண்ணீர் தச்சநல்லூர் முன்பகுதியில் உள்ள சீனியப்பாகுளத்தை அடையும். அங்கிருந்து பாய்ந்தோடும் மறுகால் தண்ணீர் செல்வவிக்னேஷ்நகர் ஓடை வழியாக திருநெல்வேலி-மதுரை சாலையை அடைந்து பின்பு கால்வாய் வழியாக தாமிரவருணி ஆற்றுக்குச் சென்றடையும். நாளடைவில் குடியிருப்புகளின் கழிவுநீரும் இந்த ஓடை வழியாகச் செல்லத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஓடை முறையாக பராமரிக்கப்பட்டதால் பிரச்னை ஏற்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக சீனியப்பாகுளத்தின் மறுகால் ஓடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் சுமார் 2 கி.மீ. தொலைவு கொண்ட ஓடையில் பாலிதீன் பைகள், கட்டடக் கழிவுகள், பழைய தளவாடப் பொருள்கள் ஆகியவை சேர்ந்து கழிவுநீரும் மழைநீரும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது ஓடையின் அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் குளம்போல் கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. இதன்அருகே தனியார் பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பயின்று வருகிறார்கள். கழிவுநீரால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் கிருமிகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது. இதுதவிர நிலத்தடி நீரிலும் கழிவுநீர் கலப்பு அதிகரித்து வருகிறது. குடிநீர்க் குழாய்களிலும் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதால் உடனடியாக ஓடையைத் தூர்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துர்நாற்றத்தால் பாதிப்பு: இதுகுறித்து தச்சநல்லூரைச் சேர்ந்த குடும்பத் தலைவி பட்டு கூறியது: செல்வவிக்னேஷ்நகரில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரைச் சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கழிவுநீரால் ஏற்படும் துர்நாற்றத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். காற்று மற்றும் மழைக் காலங்களில் வீட்டில் இருக்கவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பள்ளியும் அருகேயுள்ளதால் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். ஆகவே, ஓடையைத் தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோட மாநகராட்சி நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.
பராமரிப்பின்மை: வெல்டிங் பட்டறை தொழிலாளியான ஸ்ரீதரன் கூறியது: சீனியப்பாகுளத்தில் இருந்து பாய்ந்துவரும் மறுகால் ஓடையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் குளிக்கவும், பாத்திரங்களைக் கழுவவும் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் ஓடையை முறையாக தூர்வாராமல் விட்டதால் இப்போது கழிவுநீர் பாய்ந்தோடி வருகிறது. தூர்ந்துபோன ஓடையால் கழிவுநீர் தேங்கியுள்ளதால் இப்பகுதியில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சிரமம் அடைந்து வருகிறோம். பருவமழை தொடங்கும் முன்பாக இந்தக் கழிவுநீர் ஓடையைச் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நிலத்தடி நீர் பாதிப்பு: தச்சநல்லூரைச் சேர்ந்த ஓம்சக்தி மாரியப்பன் கூறியது: தச்சநல்லூரில் கழிவுநீர் தேங்குவதைத் தடுக்கக் கோரி போராட்டங்கள் நடத்தியும் தீர்வு காணப்படாமல் உள்ளது. இப் பகுதியில்  மாணவர்கள் உள்பட  பலர் கொசுக்கடியால் மர்மக் காய்ச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. பொலிவுறு நகரமாக மாறும் திருநெல்வேலியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்து வரும் மாநகராட்சி நிர்வாகம், தச்சநல்லூரில் கழிவுநீர் ஓடையை சீரமைத்து பொதுமக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.
அதிகாரிகள் பதில்: இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி கூறியது: 
தச்சநல்லூரில் கழிவுநீர் ஓடையை தூர்வாரவும், மாணவர்-மாணவிகளுக்கு நோய்கள் பரவாமல் தடுக்கவும் தேவையான துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
திருநெல்வேலி, செப். 19: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், 2017 முதல் 2019 வரையிலான கல்வியாண்டுகளில் உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லையாம்.
இதைக் கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி நிர்வாகிகள் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோரிக்கை மனு அளித்தனர். 
இதுகுறித்து, மாணவர்கள் கூறுகையில், தொழில்நுட்பக் கல்லூரிகளில் அரசாணை 92-ன் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, கல்வி உதவித்தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஜாதி சான்றிதழை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com