நெல்லையில் பலத்த மழை!
By DIN | Published On : 18th April 2019 09:11 AM | Last Updated : 18th April 2019 09:11 AM | அ+அ அ- |

திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை ஒரு மணி நேரம் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் மாதத்திலிருந்தே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல் மாதத்தின் 2ஆவது வாரத்திலிருந்து 102 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பநிலை பதிவாகி வருகிறது. காலையிலேயே அனல் காற்று வீசத் தொடங்குவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. பகல் 12.30 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது; காற்றும் மிக வேகமாக வீசியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்புவிளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன.
திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை, சீவலப்பேரி, கண்டிகைப்பேரி, சேந்திமங்கலம், அருகன்குளம், நொச்சிக்குளம், சிவந்திப்பட்டி, பேட்டை, நாரணம்மாள்புரம், ராஜவல்லிபுரம் உள்பட திருநெல்வேலி சுற்றுவட்டாரம் முழுவதும் மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.