நெல்லை கொக்கிரகுளத்தில் புதிய பாலம் கட்டும் பணிகள் தீவிரம்

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் புதிய பாலத்துடன் இணைப்புப் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் புதிய பாலத்துடன் இணைப்புப் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி-பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் வகையில், தாமிரவருணியின் குறுக்கே முன்பு பரிசல்கள் இயக்கப்பட்டாலும், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து,  176 ஆண்டுகளுக்கு முன்பு சுலோச்சன முதலியார் பாலம் கட்டப்பட்டது. அதன்பிறகு, போக்குவரத்து அதிகரித்துவிட்ட நிலையில், இந்த பாலம் போதுமானதாக இல்லாததால், புதிய பாலம் கட்ட வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்பேரில், சுலோச்சன முதலியார் பாலம் அருகே ரூ.14.5 கோடியில் புதிதாக பாலம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையொட்டி, திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலையில் 235 மீ. நீளம், 14.80 மீ. அகலத்தில் 11 தூண்களுடன் இரு பகுதியிலும் நடைமேடையுடன் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில், சுமார் 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோடைக்காலத்தைப் பயன்படுத்தி பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைலாசபுரம் பகுதியில் இருந்து 7 ஆவது தூண் அமைக்கப்படும் பகுதி ஆண்டு முழுவதும் நீரோட்டம் உள்ளதாகவும், ஆழம் மிகுந்ததாகவும் உள்ளதால், கூடுதல் கவனத்துடன் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, நீரோட்டத்தின் வேகத்தால் தூண்கள் பாதிக்கப்படாத வகையிலும், வெள்ளக் காலத்தில் உறுதியோடு நிற்கும் வகையிலும் புதிய தொழில்நுட்பத்தோடு அஸ்திவாரத்தின் அருகே நீர்ப்பிரிப்பு அமைப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பலாப்பழ ஓடையில் பாலம்: கொக்கிரகுளம் புதிய ஆற்றுப் பாலத்தின் இணைப்பாக, திருநெல்வேலி அறிவியல் மையத்தின் அருகேயுள்ள பலாப்பழ ஓடையிலும் புதிய பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த சில நாள்களாக துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 6 மீ. அகலம், 8.5 மீ. உயரத்தில் இந்த இணைப்புப் பாலம் உருவாக்கப்படுகிறது. 
இதன் அருகேயுள்ள மின்கம்பங்களை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் இணைப்புப் பணியை முடித்து சாலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com