மதகு சீரமைப்பிற்கான குழியில் பைக்குடன் விழுந்து ஒருவர் பலி
By DIN | Published On : 04th August 2019 04:01 AM | Last Updated : 04th August 2019 04:01 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே ஆம்பூர் கருத்தப்பிள்ளையூர் சாலையில், குளத்தின் மதகை சீரமைப்பதற்காகத் தோண்டப்பட்ட குழியில் வெள்ளிக்கிழமை
இரவு மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
ஆம்பூரிலிருந்து கருத்தப்பிள்ளையூர் செல்லும் சாலையில் உள்ளது புதுக்குளம்.
இங்கு பொதுப்பணித் துறை சார்பில், குடிமராமத்துப் பணியின் கீழ், பழைய மதகு அகற்றப்பட்டு சுமார் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, புதிய மதகு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆழ்வார்குறிச்சியில் ஒலிபெருக்கி நிறுவனம் வைத்திருந்த, கல்லூரிச் சாலையைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ஐயப்பன் (53) வெள்ளிக்கிழமை மாலை கருத்தப்பிள்ளையூர் தேவாலயத்திற்கு ஜெனரேட்டர் அமைத்துக் கொடுப்பதற்காகச் சென்றாராம்.
மீண்டும் இரவு 11 மணியளவில் வீட்டுக்குத் திரும்பியபோது மதகு சீரமைப்பிற்காக தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார்.
சனிக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவர்கள் ஐயப்பன் பள்ளத்தில் விழுந்து இறந்து கிடப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கடையம் காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி மற்றும் போலீஸார் அங்கு சென்று ஐயப்பன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆழ்வார்குறிச்சி போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.