மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதாரம் பாதிப்பு: த.வெள்ளையன்

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் குற்றஞ்சாட்டினார்.

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் குற்றஞ்சாட்டினார்.
தென்காசி வியாபாரிகள் நலச் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் மேலகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  சங்கத் தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். துணைச் செயலர் அருணாசலம், ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் ஆர்.முகைதீன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் கலந்துகொண்டு பேசியதாவது: உள்நாட்டு வணிகம், விவசாயம், சிறுபொருள்கள் உற்பத்தி என அனைத்திலும் வெளிநாடுகளின் தலையீடு அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசும் துணைபோகிறது.
ஆன்லைன் விற்பனையின் காரணமாக சில்லறை வணிகக் கடைகளே இல்லாத நிலை உருவாகும். மத்திய அரசுக்கு மக்களைப் பற்றிய கவலை இல்லை. அன்னிய குளிர்பானங்களை பயன்படுத்தினால் பாதிப்பு என்பது தெரிந்தும் அதனை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பெரிய அளவில் புரட்சி ஏற்படத்தான் போகிறது. மக்கள் நம் நாட்டு தயாரிப்புகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார் அவர்.
மாவட்டத் தலைவர் ஆர்.காளிதாசன், மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணன், மீரான், ஜோயல், பண்ணை கே.செல்வகுமார், மார்டின் சுல்தான், பெரியபெருமாள், வேம்பு, சண்முகையாபாண்டியன், ரசூல் முகம்மது, ராமசாமி, பிரம்மநாயகம், சங்கரநாராயணன், சாலமோன், மாணிக்கம் ஆகியோர் பேசினர்.

தென்காசி நகர எல்லைக்குள் மாவட்ட தலைமை அலுவலகங்கள்
தென்காசி மாவட்ட அரசு தலைமை அலுவலகங்கள் அனைத்தும் தென்காசி நகர எல்லைக்குள் அமைய வேண்டும்; தென்காசி ரதவீதிகளை சீரமைக்க வேண்டும்; ரதவீதிகளில் ஏதாவது ஒரு பகுதியில் சிறுநீர் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும்; தென்காசி-பாவூர்சத்திரம் புறவழிச் சாலை, தென்காசி ஆசாத்நகர்-இலஞ்சி புறவழிச் சாலைப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்; குளங்களுக்கு தண்ணீர் வரவேண்டிய பாதைகளைப் பராமரிக்க வேண்டும்; தென்காசி சுற்று வட்டாரப் பகுதியில் தொழிலியல் பூங்கா அமைக்க வேண்டும்; செங்கோட்டை-வேளாங்கண்ணி வரை இருமார்க்கத்திலும் தினசரி பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலர் என்.மாரியப்பன் வரவேற்றார். கௌரவ தலைவர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com