ஒண்டிவீரன் நினைவு தினம்: ஆட்சியர் ஆலோசனை

விடுதலைப் போரட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தின நிகழ்ச்சி தொடர்பாக, ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில்

விடுதலைப் போரட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தின நிகழ்ச்சி தொடர்பாக, ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகிரி வட்டம், நெற்கட்டும்செவல், மஜரா பச்சேரி கிராமம், பாளையங்கோட்டையிலுள்ள ஒண்டிவீரன் மணிமண்டபம் ஆகிய இடங்களில் ஆக. 20இல் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படும். இதுதொடர்பாக,  பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியர் கூறியது:
ஒண்டிவீரன் நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்த "முடிக்க  முழு பாதுகாப்பு ஏற்பாடுகள், மாவட்ட காவல்துறை சார்பில் செய்து கொடுக்கப்படும்.  திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஒண்டிவீரன் மண்டபத்துக்கு அஞ்சலி செலுத்த வரும் அமைப்பினர் அதற்குரிய விவரங்களை வரும் 18-ஆம் தேதிக்குள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். 
மஜரா பச்சேரி கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் சங்கரன்கோவில் முதல் ராஜபாளையம் செல்லும் சாலையிலிருந்து பிரதான சாலை, என்.ஜி.ஓ. காலனி,  அச்சம்பட்டி, புன்னைவனப்பேரி,  கண்டிகைப்பேரி, பெரியூர் வழியாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து சேர வேண்டும். கண்டிகைப்பேரி,  பெரியூர் கிராமங்கள் கூர்நோக்குடையவை என கண்டறியப்பட்டுள்ளதால் அந்தக் கிராமங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். நிகழ்ச்சிக்குப்பின் வெளியே செல்பவர்கள் ராமசந்திராபுரம், செண்பகாபுரம்,  சிவலிங்கபுரம்,  சின்ன ஒப்பனையான்புரம் வழியாக சங்கரன்கோவில் முதல் ராஜபாளையம் பிரதான சாலையில் உள்ள குவளைக்கண்ணியில் போய் சேர வேண்டும்.  அஞ்சலி செலுத்த வரும் அமைப்பினர் சட்டம்-ஒழுங்கை பிரச்னையில் ஈடுபடக்கூடாது.  உள்ளூர் நிலைமைகளை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி சார் ஆட்சியர் மணீஷ் நாராணவரே, மாநகர காவல் துணை ஆணையாளர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சுதந்திர தின ஏற்பாடு: மேலும், ஆக.15இல் கொண்டாடப்படவுள்ள சுந்திர தினம் குறித்தும் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.அப்போது,  பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நடைபெறும் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை கல்வித்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்துதல் குறித்து ஆட்சியர் ஆலோசனை வழங்கினார்.  இதிலும், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், மாநகர காவல்  துணை ஆணையர்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"மணிமண்டபத்தில் 
வரலாற்று ஆய்வு மையம்'
மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் புரட்சிப் புலிகள் இயக்கத்தின் மாவட்ட செயலர் பூவரசன் உள்ளிட்டோர் அளித்த மனு:
விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரனின் வீரதீர செயல்களை போற்றும் வகையில் அரசு சார்பில் பாளையங்கோட்டையில்  அமைக்கப்பட்ட மணிமண்டபத்தில்  ஒண்டிவீரனின் குதிரையுடன் கூடிய சிலை மட்டுமே உள்ளது. ஒண்டிவீரனின் பிறப்பு, இறப்பு, அவர் பங்கேற்ற போர்களின் விவரம், பயன்படுத்திய ஆயுதங்கள், அவருடைய கொடி வழி வாரிசுகள் பற்றிய எந்தவிதமான ஆவணமும் இல்லை. பள்ளி பாட புத்தகத்திலும் ஒண்டி வீரன் வரலாறு மேலோட்டமாகவே உள்ளது. எனவே, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில், மணிமண்டப வளாகத்தில் வரலாற்று ஆய்வு மையத்தை நிறுவ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com