"மீன்தூள் உற்பத்திக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்'

மீன்தூள் உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டுமென அகில இந்திய

மீன்தூள் உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டுமென அகில இந்திய மீன்தூள்- மீன் எண்ணெய் தயாரிப்பாளர்கள், வியாபாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநிலச் செயலர் ஷாகுல்ஹமீது திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: இந்தியா முழுவதிலும்  கால்நடை பண்ணைகளில்  கோழி தீவனம், மீன்பண்ணைகளுக்கான உணவு வகைகளுக்கு மீன் தூள் மற்றும் மீன் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றன. நாடு முழுவதும் 502 நிறுவனங்கள் மீன்தூள்- மீன்எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 13 நிறுவனங்கள் இயங்குகின்றன.  
கடந்த காலங்களில் வாட், மத்திய கலால் வரிகள் இருக்கும்போது மீன்தூள் உற்பத்திக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.  ஆனால், இப்போது மீன்தூள் உற்பத்திக்கு 5 சதவீத வரி விதித்தும், முன்தேதியிட்டு 1-7-2017 முதல் அந்த வரியை செலுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  
மீன் எண்ணெய் உற்பத்திக்கு  4 சதவிகிதமாக இருந்த வரி 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டபோதிலும் அதை 1-7-2017 முதல் செலுத்துமாறு நிர்பந்திப்பதால் உற்பத்தியாளர்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும். ஏற்கெனவே, கடந்த 4 நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சுமார் ரூ.300 கோடிக்கு மேல் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் காலவரம்பின்றி தொழிற்சாலைகளை மூடும் அபாயமும்,  பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படும். எனவே, மத்திய-மாநில அரசுகள் மீன்தூள் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது ஒருங்கிணைப்பாளர்கள் முத்துநாயகம், வெங்கடேஷ், சுசீலா, ஷாகுல்ஹமீது, அந்தோணி, வினோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com