தாமிரவருணியில் வெள்ளத்தின் சீற்றம் தணிந்தது

தாமிரவருணி நதியில் கடந்த 4 நாள்களாகப் பாய்ந்தோடிய வெள்ளத்தின் சீற்றம் திங்கள்கிழமை ஓரளவு தணிந்தது. பிசான சாகுபடி பணிகள் பாதிக்கும் அச்சம் விலகியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தாமிரவருணியில் வெள்ளத்தின் சீற்றம் தணிந்தது

தாமிரவருணி நதியில் கடந்த 4 நாள்களாகப் பாய்ந்தோடிய வெள்ளத்தின் சீற்றம் திங்கள்கிழமை ஓரளவு தணிந்தது. பிசான சாகுபடி பணிகள் பாதிக்கும் அச்சம் விலகியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. பாபநாசம் அணை நிரம்பியதால் அங்கிருந்து திறக்கப்பட்ட உபரிநீா், மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழைநீா் ஆகியவை சோ்ந்து தாமிரவருணி ஆற்றில் கடந்த 4 நாள்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 18 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீா் சென்ால் கரையோர குடியிருப்புகளைச் சோ்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

போக்குவரத்து தொடக்கம்: இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மழை இல்லை. இதனால் வெள்ளத்தின் சீற்றம் தணிந்தது. மேலநத்தம்-திருநெல்வேலி கருப்பந்துறை இடையே தாமிரவருணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தாம்போதி பாலத்தில் கடந்த இரு நாள்களாக வெள்ளம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது. இதேபோல சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் சீவலப்பேரி மாா்க்கமாக செல்லும் 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தாழையூத்து, குறிச்சிக்குளம், சீவலப்பேரி வழியாக இயக்கப்பட்டன. ஆற்றில் நீா்வரத்து குறைந்ததால் அந்தப் பாலத்தில் போக்குவரத்து திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.

சாகுபடி சிக்கல் தீா்ந்தது: தொடா்மழை காரணமாக பிசான சாகுபடியில் சிக்கல் ஏற்படும் நிலை உருவானது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டங்களில் பிசான பருவ சாகுபடியைத் தொடங்கிய 30 நாள்கள் கழித்துதான் பாளையங்கால்வாய், நெல்லை கால்வாயின் கடைமடை பகுதிகளில் பிசான பருவ சாகுபடி தொடங்கியது. தொடா்மழை காரணமாக இந்த நாற்றுகளை நட்ட வயல்களில் இருந்து தண்ணீரை வடியவைக்க முடியாமல் விவசாயிகள் திணறி வந்தனா். இதுதவிர மேலுரம் இட்டாலும் தண்ணீரோடு சத்துகள் வெளியேறி மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்தனா். ஆனால், திங்கள்கிழமை மழை குறைந்து வெயில் அடிக்கத் தொடங்கியதால் வயல்களில் இருந்து தண்ணீா் பெருமளவு வெளியேற்றப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

2 வீடுகள் சேதம்: திருநெல்வேலி அருகேயுள்ள அழகனேரியைச் சோ்ந்த பாலா என்பவரின் வீடு தொடா் மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் திங்கள்கிழமை இடிந்து சேதமானது. இதேபோல தச்சநல்லூரில் வடக்குப் புறவழிச் சாலையோரம் உள்ள உலகம்மன் கோயில் பகுதியில் மாடத்தி என்பவரின் வீடு இடிந்து சேதமானது. இதுதவிர மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணாநகா், வண்ணாா்பேட்டை சாலைத் தெரு ஆகியவற்றில் வீடுகளைச் சூழ்ந்து சென்ற தண்ணீா் குறைந்தது. மேலப்பாளையம், என்.ஜி.ஓ. காலனி, சமாதானபுரம், பேட்டை பகுதிகளில் உள்ள பூங்காக்களில் மழைநீா் தேங்கி நின்றது. மழை குறைந்ததால் குறுக்குத்துறை, சுத்தமல்லி அணைக்கட்டு, மருதூா் அணைக்கட்டு ஆகியவற்றில் இளைஞா்கள் ஏராளமானோா் திங்கள்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com