நெல்லை மாவட்டத்தில் நீடிக்கும் பருவமழை: மக்கள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டத்தில் நீடிக்கும் பருவமழை: மக்கள் மகிழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வரும் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடுமுடியாறு அணைப் பகு

திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வரும் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடுமுடியாறு அணைப் பகுதியில் 25 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் பிராதன அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளன. சனிக்கிழமை இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.60 அடியாகவும், 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 155.51 அடியாகவும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 109.30 அடியாகவும் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்)  வருமாறு: பாபநாசம்-20, சேர்வலாறு-22, மணிமுத்தாறு- 18.6, நம்பியாறு-24, கொடுமுடியாறு-25, அம்பாசமுத்திரம்-19, சேரன்மகாதேவி-13, நான்குனேரி-12.50, பாளையங்கோட்டை-1.40, ராதாபுரம்-5.20, நெல்லை-7.

பருவமழை காரணமாக தாமிரவருணி வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ள வடக்கு, தெற்கு கேடைமேழலகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன்கால்வாய், கோடகன்கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு பிசான பருவ சாகுபடியைத் தொடர்ந்து வருகிறார்கள். 

இதுதவிர மாவட்டத்தின் சிறிய அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. வடக்குப்பச்சையாறு (40.75), கொடுமுடியாறு (40), நம்பியாறு (18.72) அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையின் 80 அடி கால்வாயில் முதல் மற்றும் 2 ஆவது ரீச்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சேரன்மகாதேவி, நான்குனேரி வட்டங்களைச் சேர்ந்த பாசன விவசாயிகள் பிசான பருவ சாகுபடியைத் தொடங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com