குற்றாலத்தில் தேசிய இயற்கை முகாம்
By DIN | Published On : 14th February 2019 09:25 AM | Last Updated : 14th February 2019 09:56 AM | அ+அ அ- |

குற்றாலத்தில் தேசிய இயற்கை முகாம் இம்மாதம் 3 நாள்கள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் விஞ்ஞானியும், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான ஜி.எஸ்.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை நிதி உதவியோடு பிப். 16, 17, 18 ஆகிய மூன்று நாள்கள் தேசிய இயற்கை முகாம் குற்றாலம் பவ்டா மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், திருநெல்வேலி மாவட்ட 10 பசுமைப் படை பள்ளிகளிலிருந்து பள்ளிக்கு 5 பேர் என 50 மாணவர், மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, 10 பசுமைப்படை ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களுடன் பங்கேற்கின்றனர். முகாமின் போது இயற்கை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மலையேறும் பயிற்சி, வனத்தில் பரவலாகக் காணப்படும் தாவர, விலங்கினங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சி போன்றவைகளை இனங்கண்டறிதல், வகைப்படுத்துதல் போன்றவை நடைபெறவுள்ளன.
இதுதவிர மூன்று நாள்களிலும் மாலையில் அன்றாட பயிற்சி பற்றி விவாதித்தல், இயற்கையை அறிதல், பசுமை உறுதிமொழி எடுத்தல் போன்றவை நடைபெறவுள்ளன. நமது புவியின் எதிர்காலம், வருங்கால சந்ததியினராகிய மாணவர்கள் விழிப்புணர்வு பெறுவதால் மட்டுமே சிறப்பாக அமையும் என்பதால், இதுபோன்ற இயற்கை முகாம்கள் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. அகத்தியமலை பாதுகாப்பு ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், மலையேறும் பயிற்சி அளிப்பதுடன், பறவைகள் வண்ணத்துப்பூச்சி இனங்கண்டறியும் வழிகாட்டு நராகவும் செயல்படுகிறார். இம் மூன்று நாள் இயற்கை முகாம் ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.