நெல்லை மாவட்டத்தில் 66,789 விவசாயிகளுக்கு தலா ரூ.2,000: ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் "பிரதம மந்திரி கிஸான் சம்மான்' திட்டத்தின் கீழ்  66,789 விவசாயிகளுக்கு முதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் "பிரதம மந்திரி கிஸான் சம்மான்' திட்டத்தின் கீழ்  66,789 விவசாயிகளுக்கு முதல் தவணையாக தலா ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு "பிரதம மந்திரி கிஸான் சம்மான்' நிதி திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் விழா நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன், மக்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், வசந்தி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்துப் பேசியதாவது:
 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும்,  அதிக விளைச்சல் பெற்று பண்ணை வருவாயை உயர்த்தவும் உதவியாக ஒரு தவணைக்கு ரூ.2,000  வீதம், 3 தவணைகளாக  நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 5 ஏக்கர்  வரையிலான சாகுபடியை கொண்ட தகுதிவாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு மொத்தம் ரூ. 6,000 வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 16 வருவாய் வட்டங்களில் உள்ள 616 கிராமங்களில் தகுதியான விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன.  66,789 தகுதியான விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவர்களுடைய வங்கிக் கணக்கில்  ஞாயிற்றுக்கிழமை (பிப்.24) முதல் தவணையாக ரூ.2,000 பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தகுதியான விவசாயிகளுக்கு வாய்ப்பளிக்கும்விதமாக விவசாய நிலங்கள் குறித்து முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் சரியான வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத தகுதியான விவசாயிகள், அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் 27-ஆம் தேதிக்குள் தங்களுடைய நிலம் குறித்த சரியான ஆவணங்கள் (பட்டா நகல்) மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அளித்து பயன்பெறலாம் என்றார்.
மேலும், குறுகிய காலத்தில் 66,789 தகுதியான விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்த வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களை ஆட்சியர் பாராட்டினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுகபுத்ரா, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு)  பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ்குமார் (பொது), ராமசுப்பிரமணியன் (நிலம்), சத்ய ஜோஸ் (வேளாண்மை), விஜயகுமார் (முத்திரை) உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com