நெல்லையில் களைகட்டிய பொங்கல் விழா

திருநெல்வேலியில் அரசு அலுவலகங்கள்,  கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பொங்கல் விழா  வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. 

திருநெல்வேலியில் அரசு அலுவலகங்கள்,  கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பொங்கல் விழா  வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. 
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 15 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி பல்வேறு அரசு அலுவலகங்கள்,  கல்வி நிறுவனங்களில் சமத்துவப் பொங்கல் விழாக்கள் களைகட்டின.   அதிகாரிகள்,  மாணவர்-மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளான வேட்டி-சட்டை,  தாவணி,  சேலை அணிந்து பங்கேற்றனர்.
திருநெல்வேலி அருகே  அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு துணைவேந்தர் கி.பாஸ்கர் தலைமை வகித்தார்.  பதிவாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார்.   ஒயிலாட்டம், கரகாட்டம், நாட்டுப்புற இசைக்கு மாணவர்-மாணவிகள் நடனமாடினர்.  பல்கலைக்கழகம் முன்பு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மண்டல ஆணையர் சனத்குமார் தலைமை வகித்தார்.அதிகாரிகள் வீரேஷ்,   சிவகாமிநாதன்,  அனந்தபத்மநாபன்,  நித்யகல்யாணி, ஜெயலட்சுமி,  சரஸ்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.  
பாளையங்கோட்டை ஏ.ஆர்.லைன் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட குழந்தைகள் நகர்ப்புற நல மையத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார்.  அங்கு பயின்று வரும் ஆட்சியரின் மகள் கீதாஞ்சலி உள்பட 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பொங்கல் பாடல்களைப் பாடினர். தொடர்ந்து மையத்தின் பொறுப்பாளர் செல்வராணி,  உதவியாளர் ரேவதி உள்ளிட்டோர் பொங்கலிட்டனர். 
கங்கைகொண்டான்: கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் அலெக்ஸ் சகாயராஜ் வரவேற்றார்.
கங்கைகொண்டான் காவல்  ஆய்வாளர் தலைமை வகித்தார்.  மாணவர்-மாணவிகளுக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு வழங்கப்பட்டது. 
மானூர் அருகேயுள்ள பள்ளமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  நன்றித் திருவிழா என்ற தலைப்பில் பொங்கல் திருநாளின் சிறப்புகள் விளக்கப்பட்டன.  பாரம்பரிய விளையாட்டுகளைக் காப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.


தூய சவேரியார் பள்ளியில்...

பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தாளாளர் எல்.பிரான்சிஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வி.அகஸ்டின் ஜான் பீட்டர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் எம்.நெப்போலியன் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் பங்கேற்றார். அழிந்து வரும் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து மாணவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பங்கேற்றனர். 
மொத்தம் 60 பானைகளில் பொங்கலிட்டனர். அலங்காரம் செய்வது, பொங்கலிடுவது, தூய்மைப்படுத்துவது, வரவேற்பது என மாணவர்கள் நான்கு குழுக்களாக செயல்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட 7 குழுவினர் சிறப்பிக்கப்பட்டனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தமிழ் ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.


சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத்தில்...
பாளையங்கோட்டை சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத்தில் பொங்கல் விழா  வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மைய நிறுவனர் கு.பரமசிவன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூய சவேரியார் கல்லூரியின் ஸ்டேன்ட் திட்ட இயக்குநர்  சகாயராஜ் பங்கேற்றார். சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத்தின் அறங்காவலர்கள் எடிசன், பாலமுருகன், ராமலெட்சுமி, ஐயப்பன் உள்பட பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில்...
திருநெல்வேலி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவமனையில் பொங்கல் விழா  வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில் துணை இயக்குநர், உதவி இயக்குநர், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மனமகிழ் மன்றத்தினர் செய்திருந்தனர். திருநெல்வேலி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக துணை மண்டல அலுவலகத்தில் துணை இயக்குநர்(பொ)  எம். அருள்ராஜ் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com