பயிர்க் காப்பீடு தொகையைப் பெற பகுதி வாரியாக கணக்கெடுப்பு தேவை: கால்வாய் பாசன விவசாயிகள் கோரிக்கை

பொதுவான கணக்கெடுப்பு காரணமாக, விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுக்கான இழப்பீடு தொகையைப் பெற

பொதுவான கணக்கெடுப்பு காரணமாக, விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுக்கான இழப்பீடு தொகையைப் பெற முடியாத நிலை உள்ளதால், பகுதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என கால்வாய் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வெலி மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் கடந்த ஜூன் 28ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வேளாண்மை மற்றும் புள்ளியியல்துறை சார்பில் அளிக்கப்பட்ட  புள்ளிவிவர அறிக்கையால், பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகள், இழப்பீடு தொகையைப் பெற முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கடனாநதி அரசபத்துக் கால்வாய் நீர்ப் பாசனக் கமிட்டி தலைவர் கண்ணன் கூறியது:
 விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள்அளித்த புள்ளிவிவரங்கள் அறிக்கையில், நிகழாண்டு கார்பருவத்தில் இதுவரைநெல் 1910 ஹெக்டேரும், சிறு தானியங்கள் 2900 ஹெக்டேரும், பயறுவகைப் பயிர்கள் 800 ஹெக்டேரும், எண்ணெய்வித்துகள் 573 ஹெக்டேரும், பருத்தி 918 ஹெக்டேரும், கரும்பு 110 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிட்டுள்ளதாக பொதுவான கணக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், ஆழ்வார்குறிச்சி, கடையம் வட்டாரத்தில் இதுவரை 10 சதவீதம் கூட பயிர்கள் சாகுபடி செய்யப்படவில்லை.
தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதால், அணைகளிலிருந்து ஜூன் 1இல் விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், யாரும் விதை கூடப் பாவவில்லை.  இதனிடையே,  அதிகாரிகள் கொடுத்துள்ள பொதுவான புள்ளி விவரத்தால்,  விவசாயிகள் காப்பீடு செய்திருந்த போதிலும்,  இழப்பீடு தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-17இல் இதேபோல் கிணற்றுப் பாசனம் செய்த விவசாயிகளை மட்டும் கணக்கில் எடுத்ததால், கால்வாய் பாசன விவசாயிகள் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியவில்லை. மேலும்,  பொதுவாக அறிக்கை கொடுப்பதால் நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, மீண்டும் நிகழாண்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் வகையில்பொதுவாக அறிக்கை கொடுப்பதைத் தவிர்த்து பகுதி வாரியாக கணக்கீடு செய்து அறிக்கை வழங்கவேண்டும் என்றார்.
மாவட்ட விவசாயிகள் சங்க துணைச் செயலர் வேலாயுதம் கூறியது: 
அதிகாரிகள்விவசாயிகள் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள். கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் நடைபெறாத நிலையில், பொதுவான அறிக்கை கொடுத்து ஒட்டு மொத்த விவசாயிகளும் காப்பீட்டுத் தொகை பெறமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர். உடனடியாக இந்த அறிக்கையை மாற்றி பகுதிவாரியாக கணக்கீடு செய்து பகுதி வாரியாகவே அறிக்கை வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் விவசாயிகளைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com