கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு: தென்காசியில் என்ஐஏ சோதனை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, தென்காசியில் கைது செய்யப்பட்டவரின்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, தென்காசியில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில்  தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) புதன்கிழமை சோதனை நடத்தினர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (45). வாடகை பாத்திரக் கடை உரிமையாளரான இவர், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 16 பேர் மீது திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து, 11பேரைக் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது. 
இதையடுத்து, என்ஐஏ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌகத் அலி (கொச்சி) தலைமையிலான குழுவினர் திருவிடைமருதூரில் முகாமிட்டு, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி முதல் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரின் வீடுகளுக்குச் சென்று, அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமும், கும்பகோணத்தில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்தில் உள்ள நிர்வாகிகளிடமும் விசாரணை நடைபெற்றது. மேலும், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் ஆகிய இடங்களிலும் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே, திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள செய்யதுகுருக்கள் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த மைதீன்அகமது ஷாலி (51) என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்த ஜூன் 25ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது அவரது வீட்டில் அவரது மனைவி ஆயிஷாபானு (48) மட்டும் வசித்து வருகிறார். இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த 3 அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனை 2 மணி நேரம் நடைபெற்றது.
இதையொட்டி, தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com