வளர்ச்சியைக் காரணம் காட்டி மக்கள்விரோத நடவடிக்கைகள்: முத்தரசன் குற்றச்சாட்டு

வளர்ச்சியைக் காரணம் காட்டி, மத்திய, மாநில அரசுகள் மக்கள்விரோத நடவடிக்கைகளில்

வளர்ச்சியைக் காரணம் காட்டி, மத்திய, மாநில அரசுகள் மக்கள்விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:
தமிழகத்தில் மாணவர் படுகொலை அதிகரித்து வருகிறது. நாகரிகம் வளர்ந்துள்ள நிலையில், சாதி உள்ளிட்டவற்றின் பெயரால் கொலைகள் நிகழ்வது சரியானதல்ல. மாணவர் படுகொலைகளைத் தடுக்க சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். 
விவசாயிகள், சாமானிய மக்களுக்கு பலனளிக்காத வகையிலும், பெரு நிறுவனங்களுக்கு உதவும் வகையிலுமே மத்திய நிதிநிலை அறிக்கை உள்ளது. இதை கண்டித்து ஏஐடியுசி சார்பில், நாடு முழுவதும் வரும் 16 ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும்.
சுமார் ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பது துரதிருஷ்டவசமானது. ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கையின் புதிய வரையறை வெளியாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் அதை மொழிபெயர்த்து வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்டபிறகே அதை அமல்படுத்த வேண்டும். மக்களவையில் விவாதம் நடத்தும் முன்பே பெட்ரோல் மீதான வரி உயர்வை அமல்படுத்துவது நியாயமல்ல. தாங்கள் விரும்பும் எதையும் செய்து முடிப்போம் என்று மத்திய அரசு செயல்படுவது அபாயகரமானது.
நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்த்தால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வளர்ச்சியை காரணம் காட்டி, மத்திய, மாநில அரசுகள் மக்கள்விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. 
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை முன்வைத்துள்ள நிலையில், ஒரே கட்சி, ஒரே நபர் ஆட்சி என்ற சூழலை உருவாக்க பாஜக திட்டமிடுகிறது. எதேச்சதிகாரமான போக்கில் ஈடுபட அக்கட்சி முயற்சிக்கிறது. அந்த முயற்சியை உடனே கைவிட வேண்டும். இல்லையெனில் எதிர் விளைவுகள் உருவாகும். அதேபோல, ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மொழிக்கொள்கையில் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஆபத்தானது. 
தமிழகத்தில் அரசின் திட்டங்களை எதிர்க்கும் எந்த போராட்டத்திற்கும் அனுமதியளிக்கப்படுவதில்லை. தடையை மீறி குரல்கொடுத்தால் வழக்குகள் தொடுத்து இடையூறு அளிக்கின்றனர். நீர்மேலாண்மையை முறையாக கடைப்பிடிக்காததாலும், குளங்கள், ஆறுகளை தூர்வாரி பராமரிக்கத் தவறியதாலும் தமிழகத்தில் கடும் வறட்சியும், குடிநீர்த் தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. மராமத்து பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்படாமல் முறைகேடு செய்யப்படுகிறது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், அகில இந்திய மகளிர் சம்மேளனம் சார்பில், திருநெல்வேலியில் அக்டோபர் 2, 3, 4 ஆம் தேதிகளில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. தேசிய, மாநிலத் தலைவர்கள் பலர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என்றார் அவர்.
பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் காசிவிஸ்வநாதன், அகில இந்திய மகளிர் சம்மேளன மாநிலச் செயலரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வி. பத்மாவதி, ஏஐடியுசி சடையப்பன், விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.கசமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com