"குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர் சட்ட விழிப்புணர்வு அவசியம்'

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள்

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.
தேசிய குழந்தைகள் தொழிலாளர் திட்டம் சார்பில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். இணை தொழிலாளர் ஆணையர் ஹேமலதா, உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை அதிகாரிகள் கூறியது: குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம்-1986  குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் பெறுவது அவசியம். இச்சட்டப்படி 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை எந்தத் தொழிலிலும் ஈடுபடுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்துவது தண்டனைக்குரியது. இச்சட்டத்துக்குப் புறம்பாக பணியமர்த்துவோருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும்,  6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
வளரிளம் பருவத்தினரை எந்த நிறுவனத்திலும் ஒரு நாளில் 6 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. இந்த 6 மணி நேரத்துக்குள் அவர்களின் ஓய்வுநேரம், வேலை செய்யக் காத்திருக்கும் நேரமும் இருக்க வேண்டும். வேலைசெய்யும்போது 3 மணி நேரத்துக்குப் பிறகு 1 மணி நேரம் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பும் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. மிகை நேர வேலை அளிக்கக்கூடாது. வாரத்தில் ஒரு முழுநாள் வார விடுமுறை அளிக்க வேண்டும். வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்திய தேதியிலிருந்து 30 நாள்களுக்குள் நிறுவனத்தின் உரிமையாளர், நிறுவனத்தின் பெயர், முகவரி, நிர்வகிப்போரின் விவரம், தொழில் அல்லது செய்முறைத் தன்மை ஆகிய விவரங்கள் அடங்கிய அறிவிப்பு, தொடர்புடைய தொழிலாளர் ஆய்வாளருக்கு அனுப்பப்பட வேண்டும். பதிவேடுகளும் பராமரிக்க வேண்டும் என்றனர்.
நிகழ்ச்சியில், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் சந்திரகுமார், விஸ்வநாதன்,  சைல்டு லைன் நிர்வாகி ஜெயபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com