தச்சநல்லூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை: சாலை மறியல்

தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (டைஃபி) மாவட்ட பொருளாளர்

தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (டைஃபி) மாவட்ட பொருளாளர் அசோக் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அசோக் (25). இவர், கங்கைகொண்டான் பகுதியில் உள்ள தனியார் டயர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதன்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்பியுள்ளார் அசோக். கரையிருப்பு கொம்பு ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் வந்திறங்கிய அவரை மர்மகும்பல்  வெட்டி சாய்த்தது. பின்னர் அவருடைய உடலை இழுத்துச் சென்று அந்தப் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் அருகேயுள்ள புதரில் வீசிச் சென்றனர்.
இதையடுத்து,  தகவலறிந்து திரண்ட அவருடைய உறவினர்கள் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர்,  அசோக்கின் உடலை அங்கிருந்து போலீஸார் எடுக்கவிடாமல் தடுத்ததோடு, கரையிருப்பு பகுதியில் உள்ள திருநெல்வேலி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் புறழிச்சாலை மற்றும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) பெரோஸ்கான் அப்துல்லா,  உதவி ஆணையர்கள் எஸ்கால், கோடிலிங்கம், திருநெல்வேலி வட்டாட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இந்தப் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்கெனவே மோதல் இருந்து வருகிறது. இதனால் பிரச்னைகள் ஏற்படலாம் என போலீஸாருக்கு ஏற்கெனவே எச்சரித்தோம். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் காரணமாகவே இப்போது ஜாதிய கொலை நடந்துள்ளது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் நள்ளிரவு வரை சாலை மறியல் நீடித்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். 
முன்விரோதம்: கொலை செய்யப்பட்ட அசோக், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தனது தாய் ஆவுடையம்மாளை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்துள்ளார். அப்போது ஆவுடையம்மாளின் கையில் இருந்த புல் கட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மீது உரசியதாம். 
இதையடுத்து அந்த நபர் ஆவுடையம்மாளை தாக்கினாராம். இதுகுறித்து அசோக் அளித்த புகாரின்பேரில் தச்சநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே அசோக் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com