தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் சிறப்பு உழவாரப் பணி: 800 பேர் பங்கேற்பு
By DIN | Published On : 23rd June 2019 05:12 AM | Last Updated : 23rd June 2019 05:12 AM | அ+அ அ- |

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் இந்து ஆலயங்களை சுத்தம் செய்யும் இறைப் பணி சபையின் சார்பில் உழவாரப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இப்பணியில் 800 பேர் பங்கேற்றனர்.
இந்த சபையின் 209-வது சிறப்பு உழவாரப் பணி தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. கோயில் சுற்றுப்பிரகாரம், கோசாலை, கோயிலில் உள்ள குளம், நந்தவனம் பகுதிகளில் உள்ள தேவையற்ற செடி,கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நமச்சிவாய உழவாரப் படையின் தலைவர் ஏ. வேணுகோபால் தலைமை வகித்தார்.
செயலர் நா. வீரமுத்து, பொருளாளர் இரா. வசந்தகுமார், துணைச் செயலர் சத்தியநாதன், துணைத் தலைவர் கருப்புசாமி, சட்ட ஆலோசகர் எஸ். சாந்தன்பாபு, லோகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிபதி ஜி. நாகராஜன் உழவாரப் பணியை தொடங்கிவைத்தார். உழவாரப் பணியில் சென்னை, சூளைமேடு, பெரம்பூர், அம்பத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 800 பேர் ஈடுபட்டனர்.
இருநாள்கள் நடைபெறும் இப்பணியின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தென்காசி தெப்பகுளத்தில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. முன்னதாக, தென்காசி கோயிலுக்கு வந்த இறைப்பணி சபையினரை உலகளாவிய ஓம் நமசிவாய அறக்கட்டளை மாநிலச் செயலர் ஈஸ்வரன், நகர பாஜக தலைவர் திருநாவுக்கரசு, சங்கரசுப்பிரமணியன், ராஜ்குமார், காந்தி ஆகியோர் வரவேற்றனர்.