காவலர்களுக்கு தீயணைப்பு பயிற்சி முகாம்
By DIN | Published On : 24th March 2019 03:47 AM | Last Updated : 24th March 2019 03:47 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினருக்கு தீயணைப்புப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொது இடங்களில் தீ விபத்துகள் ஏற்படும் போது அதை தடுப்பது, தீ விபத்துகளில் காயம் அடைந்த நபர்களுக்கு முதலுதவி மற்றும் விரைவாக சிகிச்சை அளிக்க கொண்டு செல்வது குறித்து மாநகர காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற முகாமில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வசேகரன் தலைமையிலான குழுவினர் பயிற்சி அளித்தனர். எளிதில் தீப்பற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் தீயை அணைக்கும் முறைகள், விபத்து காலங்களில் வாகனங்களில் சிக்குபவர்கள் மற்றும் கட்டடங்களில் சிக்கித் தவிப்போரை மீட்பதில் உள்ள நுணுக்கங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
ஆயுதப்படை உதவி ஆணையர் ஆனந்தராஜ், ஆய்வாளர்கள் சாது சிதம்பரம், ராஜசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.