2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளர் ஞானதிரவியம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார் திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியம். 

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார் திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியம். 
திருநெல்வேலியில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த அவர், பின்னர்  செய்தியாளர்களிடம் கூறியது: 
 திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில்  ஏராளமான அடிப்படை தேவைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன். இத்தொகுதியில் தொழில் துறை முன்னேறவில்லை. மக்கள் நம்பியுள்ள விவசாயத்திலும் முன்னேற்றம் இல்லை. ஆலங்குளம் பகுதியில் 30 ஆயிரம் பேருக்கு மேல் பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பீடித் தொழிலுக்கு 24 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால், அந்தத் தொழில் அழிந்து கொண்டு வருகிறது. எனவே பீடித் தொழில் மீதான ஜிஎஸ்டியை குறைக்க முயற்சிப்பேன். 
ஆலங்குளம் தொகுதியில் பீடித் தொழிலாளர்களுக்காக செயல்படும் மருத்துவமனைக்கு தமிழக அரசால் ஆண்டுக்கு ரூ.18 கோடி மானியம் வழங்கப்பட்டது. அந்த மானியம் இப்போது வழங்கப்படவில்லை. அதனால், பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். 
மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் விவசாயப் பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துகின்றன. பன்றிகள் வன விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், அதை எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, அவற்றை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பேன். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தாமிரவருணி- கருமேனியாறு இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீத வேலைகள் முடிந்த நிலையில், 8 ஆண்டுகளாக எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். 
திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் தூண்டில் பாலம் இல்லை. தூண்டில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன். நான் வெற்றி பெற்றதும் திருநெல்வேலி பகுதியில் அலுவலகம் தொடங்கி, மக்களை சந்தித்து குறைகளை கேட்டு,  நிவர்த்தி செய்வேன். திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.  எனவே, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com