மத்திய அரசின் சுகாதார நலத்திட்ட மையத்தில் உறுப்பினர் சேர்க்கை
By DIN | Published On : 01st May 2019 09:27 AM | Last Updated : 01st May 2019 09:27 AM | அ+அ அ- |

திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் உள்ள மத்திய அரசின் சுகாதார நலத்திட்ட மையத்தில் மத்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஓய்வூதியர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு சிரமம் இன்றி மருத்துவ உதவிகள் கிடைக்கும் வகையில் மத்திய அரசின் சுகாதார நலத்திட்ட மையத்தை திருநெல்வேலியில் தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 33 அஞ்சல்துறை மருத்துவமனைகளை மத்திய அரசின் சுகாதார நலத்திட்ட மையமாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சியில் செயல்பட்டு வந்த அஞ்சல்துறை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 1ஆம் தேதி முதல் மத்திய அரசின் சுகாதார நலத்திட்ட மையமாக மாற்றப்பட்டுள்ளது. அஞ்சல் துறை ஊழியர்கள் மட்டுமே அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இப்போது திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்குள் உள்ள மத்திய அரசின் ஊழியர்கள் (வருமான வரித்துறை உள்ளிட்டவை), திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மத்திய அரசு ஓய்வூதியர்கள் சிகிச்சை பெறலாம்.
இம்மருத்துவமனையில் உறுப்பினராக சேர தங்களது மத்திய அரசுப் பணி அல்லது ஓய்வூதியருக்கான சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு சென்றால் போதுமானது. பின்னர் அங்குள்ள ஊழியர்களின் வழிகாட்டுதல்படி உறுப்பினராக சேர்ந்த பின்பு தொடர்ந்து மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம். மருந்துகளையும் இலவசமாக பெறலாம்.
இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறியது:
இங்கு உறுப்பினராக சேருபவர்களுக்கு இதயவியல், எலும்பியல் உள்ளிட்ட சிறப்புச் சிகிச்சைகள் தேவைப்பட்டால் எங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் மருத்துவமனைகள் மூலமும் சிகிச்சை பெற முடியும். திருநெல்வேலி மையத்தில் உறுப்பினர் சேர்க்கையை பொறுத்து அடுத்தக்கட்டமாக விரிவாக்கப் பணிகள் நடைபெறும் என்றனர்.