மேலப்பாளையத்தில் பராமரிப்பின்றி பாழாகும் பூங்காக்கள்!

மேலப்பாளையத்தில் குழந்தைகளின் பொழுதுபோக்குக்கு உதவாத வகையில் பராமரிப்பின்றி பூங்காக்கள்

மேலப்பாளையத்தில் குழந்தைகளின் பொழுதுபோக்குக்கு உதவாத வகையில் பராமரிப்பின்றி பூங்காக்கள் உள்ளதால்  பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள், மாணவர்கள் வீடுகளில் பகல் பொழுதைக் கழித்து வருகிறார்கள்.  மாலை வேளையில் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களைத் தேடி செல்கின்றனர்.
திருநெல்வேலி மாநகரில் மாவட்ட அறிவியல் மையம்,  அரசு அருங்காட்சியகம், பூங்காக்கள் ஆகியவற்றைத் தவிர சொல்லும்படியான பொழுதுபோக்கு மையம் எதுவும் இல்லை.
திருநெல்வேலி மாநகராட்சியில்  மேலப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் ஆஸாத் சாலை அருகே பொதுமக்கள் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டன.
இந்தப் பூங்காவில் இருந்த ஊஞ்சல்கள், சறுக்கு விளையாட்டு உள்ளிட்டவை சேதமடைந்து முள்கள் வளர்ந்து காணப்படுகின்றன. 
இதேபோல சேவியர் காலனியில் உள்ள பூங்கா, வண்ணார்பேட்டையில் தாமிரவருணி கரையோரம் உள்ள பூங்கா உள்ளிட்டவற்றிலும் விளையாட்டு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் காட்சியளிக்கிறது.
இதுகுறித்து மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகம்மது அலி கூறியது:  குழந்தைகள் கோடை விடுமுறையில் விளையாடத் தகுந்த பூங்காக்கள் திருநெல்வேலியில் இல்லாதது வேதனையளிக்கிறது.  குறிப்பாக மேலப்பாளையம் மண்டலத்தில் புறநகர் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.  ஆனால், அதற்கேற்ப பூங்கா வசதியில்லை.  
அதேபோல  வண்ணார்பேட்டையில் தாமிரவருணி கரையோரம் அழகிய பூங்கா அமைக்கப்பட்டது.  தினமும் 100-க்கும் மேற்பட்டோர் இங்கு சென்று வந்தனர்.
மாநகராட்சி சார்பில் போதிய பராமரிப்பின்மையால் புதர்மண்டி கிடக்கிறது.  விஷ ஜந்துகளின் இருப்பிடமாக மாறிவிட்டதால் மக்கள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர்  என்றார்.
அம்ருத் திட்டத்தில் புதுப்பொலிவு: இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் 144 இடங்கள் பூங்காக்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாடு நகர உள்கட்டமைப்பு நிதிசேவை நிறுவனம், அம்ருத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பூங்காக்கள் புதுப்பிப்பு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உருவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. 
பாளையங்கோட்டை சாந்திநகர்,  ராஜராஜேஸ்வரிநகர், டார்லிங்நகர்,  என்ஜிஓபி காலனி,  அன்புநகர்,  உழவர்சந்தை, பேட்டை, சாஸ்திரிநகர், இந்திராநகர், வீரபாகுநகர், காந்திநகர், அபிராமிநகர், கோடீஸ்வரன்நகர், வையாபுரிநகர், ஆர்ஆர்ஜேநகர்,  தச்சநல்லூர் நல்மேய்ப்பர்நகர் போன்ற இடங்களில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பூங்காக்களில் சுற்றுச்சூழல் நடைபாதை, அமர்வதற்கு இடங்கள், மூலிகை மரங்கள், பசுமை புல்வெளிகள், சிறுவர்களுக்கு விளையாட்டு கருவிகள், விலங்குகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
பெரும்பாலான பூங்காக்கள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பூங்காக்களின் பராமரிப்புக்கு குடியிருப்பு நலச்சங்கங்கள் உதவ வேண்டும்.  அதேபோல விளையாட்டு உபகரணங்களை கவனத்துடன் கையாள வேண்டும். சிலர் வேண்டுமென்றே உடைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். பொதுச்சொத்துகளைக் காப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம் தேவை என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com