ஆலங்குளத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 20  லட்சம் நகை, பணம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 


திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
ஆலங்குளம், காந்தி நகர் அம்பை சாலைப் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம் மகன் சந்திரவாசகம் (69). அப்பகுதியிலுள்ள அரிசி ஆலையில் கணக்கராக உள்ளார். இவருக்கு மனைவி கல்யாணி, மகன்கள் சுரேஷ்குமார், வேலவன், ராகவன் மற்றும் ஒரு மகள்  உள்ளனர். இதில், சுரேஷ்குமார் பெங்களூரூவிலும், ராகவன் சென்னையிலும் பணிபுரிந்து வருகின்றனர். வேலவன் ஆலங்குளத்தில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (மே 3) கல்யாணிக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சந்திரவாசகம் குடும்பத்துடன் சென்றுள்ளார். 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் கடையைத் திறக்க வேண்டும் என்பதற்காக  வேலவன் மட்டும் ஆலங்குளம் வந்தார். முற்பகல் 11.30 மணியளவில் வீட்டைத் திறந்து பார்த்த போது,  பின் வாசல் கதவு அறுத்து உடைக்கப்பட்டு  பீரோவில் இருந்த 630 கிராம் தங்க நகை, 170 கிராம் வெள்ளிநகை  மற்றும் ரூ. 7 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்ததாம். கூட்டுக் குடும்பமாக வதித்து வந்ததால் மகன்கள் வெளியூர் வேலைக்குச் சென்றாலும் அனைவரின் தங்க நகைகளும் இந்த வீட்டில் தான் இருந்து வந்தனவாம்.
இதுகுறித்து வேலவன் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம்  டிஎஸ்பி சுபாஷினி, விரல் ரேகை நிபுணர் அகஸ்டா கனகமணி மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். விரல் ரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் சோதனைக்கு விடப்பட்டதில்,  வீட்டைச் சுற்றி வந்து, பின்னர் அம்பாசமுத்திரம் சாலை வரை சென்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.  இதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிந்து, துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். திருட்டுப் போன பொருள்களின் மொத்த மதிப்பு ரூ. 20 லட்சம் வரை இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com