நெல்லையில் 2ஆவது நாளாக 105 டிகிரி வெயில்: மக்கள் அவதி

கத்தரி வெயிலால் திருநெல்வேலியில் திங்கள்கிழமை அனல் காற்று வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை

கத்தரி வெயிலால் திருநெல்வேலியில் திங்கள்கிழமை அனல் காற்று வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாளையங்கோட்டையில் 2ஆவது நாளாக திங்கள்கிழமை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் கோடை வெப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. பருவமழை முறையாகப் பெய்யாமல் குளங்களில் நீர் இல்லாததால் காற்றின் ஈரப்பதம் முற்றிலும் குறைந்து அனல்காற்று வீசி வருகிறது. 
கடந்த 4 ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால்  வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அம்பாசமுத்திரம், ராதாபுரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாள்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் ஞாயிற்றுக்கிழமை பதிவானது.
தொடர்ந்து 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் 105 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. அனல்காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். அதிக வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது: பருவநிலை மாற்றத்தால் நிகழாண்டில் வெப்பநிலை மிகவும் அதிகரித்துள்ளது. பானி புயல் காரணமாக எதிர்பார்த்த மழை பெய்யாத நிலையில் இப்போது அனல்காற்று அதிகரித்துள்ளது.  பலர் வெப்ப நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். வாய்ப்புண், சிறுநீர் கடுப்பு, வயிற்றுப்புண் உள்ளிட்டவை ஏற்பட்டு அனைத்து வயதினரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். சிலருக்கு சளி, இருமலுடன், சிறுநீர் கடுப்பும் உருவாகும் அபாயம் உள்ளது. அவ்வாறு ஏற்படுபவர்கள் ரத்த மாதிரிகளை சோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையின்பேரில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்களின் சாறுகளை அதிகம் பருகினால் உடலின் வெப்பத்தை சீராக வைக்க முடியும். குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணிவிக்க வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை தினமும் இருவேளை குளிக்கவைக்கலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com