செங்கோட்டை பகுதியில் மாம்பழ விளைச்சல் அதிகம்; விலை சரிவு: விவசாயிகள், வியாபாரிகள் வேதனை

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாம்பழ விளைச்சல் அதிகரித்தபோதிலும்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாம்பழ விளைச்சல் அதிகரித்தபோதிலும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மா சாகுபடி மும்முரமாக நடைபெறும். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, வல்லம், பூலாங்குடியிருப்பு, பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் மா சாகுபடி அதிகளவு நடைபெற்று வருகிறது. சப்போட்டா, அல்போன்சா, இமாம்பசந்த், கருநீலம், செந்தூரம், ஆலம்பாடி உள்ளிட்ட 11 வகையான மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் பருவமழை சரியாக இல்லாததால் விவசாயிகள் கலக்கம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து சில நாள்கள் பெய்த மழையால் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இருப்பினும் கடுமையான விலை சரிவால் விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர்.
ஒரு கிலோ மல்கோவா மாம்பழம் ரூ.40 - ரூ.45 வரையிலும், சப்போட்டா ரூ.30- ரூ.35, செந்தூரம் ரூ.15, இமாம்பசந்த் ரூ.23, தோத்தப்பேரி ரூ.13, ஆக்குஸ் ரூ.30, கருநீலம் ரூ.40, பஞ்சவர்ணம் ரூ.23-க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டைவிட இது மிகவும் குறைவான விலையாகும்.
இதுகுறித்து மாம்பழ வியாபாரி ஷாகுல்ஹமீது கூறியது: மார்ச் முதல் ஜூன் வரையிலான 4 மாத காலத்தில் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப்படும் மாம்பழங்களை பதப்படுத்தி விற்பனை செய்யக்கூடிய அளவில் இந்தப் பகுதிகளில் குளிர்பதன  கிடங்கு எதுவும் இல்லாததால் வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். 
எனவே, நெல்லை மாவட்டத்தில் மா விளைச்சல் அதிகம் காணப்படும் பகுதிகளைக் கண்டறிந்து அந்தப் பகுதிகளில் குளிர்பதன கிடங்கு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com