காவல்கிணறு உபகாரமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 16th May 2019 06:52 AM | Last Updated : 16th May 2019 06:52 AM | அ+அ அ- |

பணகுடி அருகே உள்ள காவல்கிணறு புனித உபகாரமாதா ஆலயத்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா கொடியேற்றத்தையொட்டி காலை திரியாத்திரை திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாலை 6.30 மணிக்கு வேளாங்கன்னி மாதா சப்பர ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து புனித கொடியை பங்குத் தந்தை மகிழன் அடிகளார் ஜெபம் செய்து அர்ச்சித்தார். அதன் பின்னர் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் சேவியர் டெரன்ஸ் கொடியேற்றினார்.
நிகழ்ச்சியில் அருள்தந்தையர்கள் பென்சிகர், அமலதாஸ், மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இந்த விழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாள்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இம் மாதம் 22-ஆம் தேதி 8-ஆம் திருநாள் அன்று மாலை நற்கருணைப்பவனி நடைபெறுகிறது. 23-ஆம் தேதி 9-ஆம் திருநாள் அன்று இரவு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. 10-ஆம் திருநாள் காலை ஆயர் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை தலைமையில் பங்கு மக்கள் செய்துவருகின்றனர்.