சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையர்
By DIN | Published On : 16th May 2019 06:56 AM | Last Updated : 16th May 2019 06:56 AM | அ+அ அ- |

சங்கரன்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நகராட்சி ஆணையர் பி.முகைதீன்அப்துல்காதர்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை தடுக்கும் பணியைத் தீவிரப்படுத்தும் நோக்கில் காவல்துறை, வருவாய்த் துறை, நகராட்சித் துறை ஆகிய 3 துறையினரையும் இணைத்து குழு அமைக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இக்குழுக்கள் மூலம் உணவு விடுதிகள், ஹோட்டல்கள், டீ கடைகள், துணிக் கடைகள், பலசரக்கு கடைகள், வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.1லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து அதில் ஈடுபட்டால் குற்றச் செயலாகக் கருதி காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொதுமக்கள், வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.