தீப்பிடித்த மரத்தை அகற்றாததால் குடிநீர் விநியோகம் பாதிப்பு
By DIN | Published On : 16th May 2019 06:54 AM | Last Updated : 16th May 2019 06:54 AM | அ+அ அ- |

கடையத்தில் குப்பைக்கிடங்கு அருகில் தீப்பிடித்து எரிந்த புளியமரத்தை அகற்றாததால் இரண்டு ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடையம் ஒன்றியம் தெற்குக் கடையம் ஊராட்சிக்குச் சொந்தமான ராமநதிக்குச் செல்லும் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை மாலை பிடித்த தீ அருகிலிருந்த புளிய மரத்திலும் பிடித்து மரத்தின் பெரும் பகுதி எரிந்ததால் அந்த மரம் வலுவிழந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த மரத்தைக் கடந்து செல்லும் மின்கம்பியில் விழும் அபாயம் உள்ளதாகக் கூறி மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியை அகற்றி விட்டனர். இதனால் கீழக்கடையம் மற்றும் தெற்குக் கடையம் ஊராட்சிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் மோட்டார்களுக்கு மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து திங்கள்கிழமையிலிருந்து இரண்டு ஊராட்சிப் பகுதியிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தீப்பிடித்த புளிய மரம் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமானதால் அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் புதன்கிழமை மாலை வரை மரத்தை அகற்றவில்லை. இதனால் மின் இணைப்பும் கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் மின் இணைப்பின்றி குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே உடனடியாக மரத்த அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.