நெல்லையில் காற்றுடன் மழை: மின்கம்பம் சரிந்ததால் இருளில் மூழ்கிய சாந்திநகர்
By DIN | Published On : 18th May 2019 09:31 AM | Last Updated : 18th May 2019 09:31 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை சாந்திநகரில் வெள்ளிக்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, மரக்கிளை முறிந்து, மின் கம்பம் சரிந்ததால், அப்பகுதி இருளில் மூழ்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. திருநெல்வேலி மாநகரைப் பொறுத்தவரையில் பகலில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
பாளையங்கோட்டை சாந்திநகர் 5-ஆவது குறுக்குத் தெருவில் வீட்டின் முன்பு இருந்த பழமையான வேப்ப மரத்தின் பெரிய கிளை முறிந்து, அந்த வீட்டின் மீதே விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் இருந்த மின் வயர் அறுந்ததோடு, அருகில் இருந்த மின் கம்பமும் சரிந்தது. இதையடுத்து சாந்திநகர், திம்மராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மரத்தை அறுத்து அந்தப் பகுதியில் இருந்து அகற்றினர். மின்கம்பம் சரிந்ததால் சாந்தி நகர் சுற்று வட்டாரங்களில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.
மின்சாரம் துண்டிப்பு: கல்லூர் பகுதியில் மாலை 4 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எந்த இடத்தில் உள்ள மின் வயரில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவதற்காக மின்வாரிய ஊழியர்கள் தீவிர முயற்சி கொண்டனர். எனினும் இரவு 11 மணி வரை கண்டறிய முடியவில்லை. இதனால் கல்லூர்ப் பகுதி இருளில் மூழ்கியது.