அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 28th May 2019 08:28 AM | Last Updated : 28th May 2019 08:28 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் உள்ள அரசு இசைப் பள்ளியில் சேர்க்கை நடைபெற்று வருவதால், மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப் பள்ளி 1997 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை மூலம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இசைப் பள்ளியில் பயில்வதற்கு 12 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மூன்றாண்டுகள் பயில வேண்டும். முதல் ஆண்டுக்கு ரூ. 152, இரண்டாம் ஆண்டு , மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.120 கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இசைப் பள்ளியில் பயிலும் மாணவ,–மாணவியருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து வசதி, ரயில் கட்டண சலுகை வசதி, தங்கும் விடுதி வசதி, மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ.400, இலவச சீருடை, இலவச மிதிவண்டி, இலவச காலணி ஆகியவை அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இசைப் பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடிக்கும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு தேர்வு இயக்ககத்தால் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் இசைப் பள்ளி மற்றும் இந்து அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அரசு இசைப் பள்ளியில் சேர்ந்து இசையைக் கற்று இசை ஆசிரியர்களாகவும் கலை வல்லுநர்களாகவும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு அரசு இசைப் பள்ளி, 870/21 அரசு அலுவலர் "ஆ' குடியிருப்பு, கலை பண்பாட்டு வளாகம், திருநெல்வேலி -7 என்ற முகவரியிலோ அல்லது 0462 2551400, 9443810926 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.