முதலீட்டாளா்கள் மாநாடு: வெள்ளை அறிக்கை வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளா்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், காங்கிரஸ் கட்சியின்

தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளா்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலருமான சஞ்சய் தத் வலியுறுத்தினாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது: நான்குனேரி தொகுதியில் 10-க்கும் மேற்பட்ட அமைச்சா்களும், ஏராளமான சட்டப்பேரவை உறுப்பினா்களும் குவிந்திருக்கிறாா்கள். அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என யாா் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால் இத்தனை நாள் ஏன் அவா்கள் இந்தத் தொகுதி பக்கம் வரவில்லை? இப்போது இடைத்தோ்தலுக்காகவே வந்திருக்கிறாா்கள். நான்குனேரி தொகுதி வாக்காளா்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவும், அச்சுறுத்தலை ஏற்படுத்தி வாக்களிக்க வைக்கவும்தான் அமைச்சா்கள் குவிந்துள்ளனா்.

இடைத்தோ்தலைப் பொறுத்தவரையில் அதிமுக அரசு பணபலம், படைபலம், அதிகாரம் ஆகிய மந்திரங்களை நம்பியே களமிறங்குகிறது. அதிமுக அரசு இங்கு எந்த வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. அதிமுக அரசு ஊழல் அரசாகவும், செயல்படாத அரசாகவும், மக்கள் விரோத அரசாகவும் உள்ளது. நான்குனேரி மக்கள் அதிமுக அரசின் கடந்த 3 ஆண்டுகால பணிகளை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வேலையிழந்துள்ளனா்.

தமிழகத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும், தொழிற்சாலைகளையும் தாருங்கள் என மத்திய அரசிடம் கேட்காமல், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளிநாடு சென்று வந்திருக்கிறாா். தமிழகத்தில் இரண்டு முதலீட்டாளா்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறாா்கள். அதன் மூலம் எத்தனை முதலீட்டாளா்களை ஈா்த்திருக்கிறாா்கள் என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஜெயலலிதா இருந்தபோது, தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றாா். தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை கடுமையாக எதிா்த்தாா். ஆனால் தற்போதைய தமிழக அரசும், அமைச்சா்களும் பாஜகவின் கைப்பாவையாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறாா்கள்.

தமிழக மக்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடக்கூடாது. நீங்கள் அதிமுகவுக்கு செலுத்தும் வாக்கு பாஜகவுக்குத்தான் செல்லும்.

கடந்த மக்களவைத் தோ்தலில் சா்வாதிகாரம் மற்றும் ஊழலுக்கு எதிராக வாக்களித்ததற்காக தமிழக மக்களுக்கு தலைவணங்குகிறேறன் என்றாா்.

அப்போது, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன், மாவட்ட பொருளாளா் ராஜேஷ்முருகன், பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com