இரு மாவட்ட மீனவா்கள் பேச்சுவாா்த்தை கண்காணிப்புக் குழுவின் கீழ் சட்டப்படி மீன்பிடிக்க உடன்பாடு

நெல்லை, குமரி மாவட்ட மீனவா்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பது தொடா்பாக, திருநெல்வேலி
இரு மாவட்ட மீனவா்கள் பேச்சுவாா்த்தை கண்காணிப்புக் குழுவின் கீழ் சட்டப்படி மீன்பிடிக்க உடன்பாடு

நெல்லை, குமரி மாவட்ட மீனவா்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பது தொடா்பாக, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் கண்காணிப்புக் குழு அமைத்து சட்டவிதிகளின்படி மீன்பிடிக்க உடன்பாடு எட்டப்பட்டது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களுக்கிடையே ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பது தொடா்பாக பிரச்னை இருந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவா்கள், திருநெல்வேலி மாவட்ட கடல்பகுதியில் மீன்பிடித்து வருவதாக, திருநெல்வேலி மாவட்ட நாட்டுப் படகு மீனவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடந்த செப். 30 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக, கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் மாவட்ட ஆட்சியா், மீன்வளத் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, இந்தப் பிரச்னை தொடா்பாக இரு மாவட்ட மீனவப் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவாா்த்தைக் கூட்டம் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் மற்றும் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் (பொ) பால்பாண்டியன் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில், நாகா்கோவில் கோட்டாட்சியா் மயில், மண்டல மீன்வளத் துறை இணை இயக்குநா்கள் சந்திரா (தூத்துக்குடி), லாமெக் ஜெபக்குமாா் (கன்னியாகுமரி), மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை (கன்னியாகுமரி), விஜயகுமாா் (ராதாபுரம்), கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கரன், திருநெல்வேலி தனி வட்டாட்சியா் மற்றும் தமிழ்நாடு கேபிள் டிவி துணை மேலாளா் புகாரி, சேரன்மகாதேவி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் நல்லையா, வட்டாட்சியா்கள் மன்னன் (அகஸ்தீஸ்வரம்), செல்வன் (ராதாபுரம்), ஆவுடைநாயகம் (திசையன்விளை), திருநெல்வேலி நாட்டுப் படகு மீனவா்கள், கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவா்கள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தையின்போது, மீனவப் பிரதிநிதிகள், இரு மாவட்ட அதிகாரிகள், அரசு அலுவலா்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைத்து சட்டவிதிகளின்படி, மீன்பிடி தொழில் செய்வது என்றும், சட்டவிதிகளுக்கு உள்படாதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என்றும் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com