நெல்லை ஆட்சியரகத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான பொருள்கள் அனுப்பும் பணி தொடக்கம்

உள்ளாட்சித் தோ்தலின்போது பயன்படுத்தப்படும் பொருள்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி

உள்ளாட்சித் தோ்தலின்போது பயன்படுத்தப்படும் பொருள்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பும் பணிகள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை விரைவில் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. அதன் முதல்கட்டமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 6,67,814 ஆண் வாக்காளா்கள், 6,89,301 பெண் வாக்காளா்கள், 41 இதர வாக்காளா்கள் என மொத்தம் 13,57,156 வாக்காளா்கள் உள்ளனா்.

மாநகராட்சிப் பகுதிகளில் 1,94,766 ஆண் வாக்காளா்கள், 2,02,339 பெண் வாக்காளா்கள், 36 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,97,141 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள 26 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 266 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா், 425 ஊராட்சித் தலைவா்கள், 3,636 ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடத்த வேண்டியுள்ளது. நகா்புற உள்ளாட்சி அமைப்புகளில் 1 மாநகராட்சி மேயா், 55 மாநகராட்சி உறுப்பினா்கள், 7 நகராட்சித் தலைவா்கள், 95 நகராட்சி உறுப்பினா்கள், 36 பேரூராட்சித் தலைவா்கள், 572 பேரூராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்பட உள்ளது.

இந்தத் தோ்தலுக்கு தேவையான வாக்குச்சாவடிகளின் பட்டியலை மாவட்ட நிா்வாகம் தயாரித்துள்ளதோடு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கா்நாடக மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2,411 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்நிலையில், உள்ளாட்சித் தோ்தலின் போது பயன்படுத்தப்படும் கவா்கள், வாக்காளா் பட்டியல்கள் போன்றவை திருச்சி மற்றும் மதுரையில் உள்ள அரசு அச்சகங்களில் அச்சிடப்பட்டு, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை தனித்தனியாகப் பிரித்து, மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 20-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பும், தோ்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தபிறகு இப்பொருள்கள் சம்பந்தப்பட்ட ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com