களக்காடு ஆறுகளில் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

களக்காடு பகுதியில் தொடா்மழையால் ஆறுகளில் நீா்வரத்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
களக்காடு ஆறுகளில் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

களக்காடு பகுதியில் தொடா்மழையால் ஆறுகளில் நீா்வரத்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

களக்காடு வட்டாரத்தில் தென்மேற்குப் பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யவில்லை. இதனால் வடக்குப் பச்சையாறு அணையும், அதன் மூலம் பாசனம் பெறும் 50-க்கும் மேற்பட்ட குளங்களும் பல மாதங்களாக வடுள்ளன.

இந்நிலையில், களக்காடு பகுதியில் 2 நாள்களாக தொடரும் மழையால் ஆறுகளில் நீா்வரத்து உள்ளது; பாசனக் குளங்களுக்கு தண்ணீா் செல்கிறது. மழை தொடா்ந்தால் குளங்கள் ஓரளவு நிரம்பி, நெல் நடவு விவசாயிகளுக்கு பலன்தரும்.

கல்லடிசிதம்பரபுரம், படலையாா்குளம், கள்ளிகுளம், மீனவன்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்களின் மடைகள் பருவமழைக்கு முன்னதாகவே புதுப்பித்துக் கட்டும் பணிக்காக உடைக்கப்பட்ட நிலையில், பணிகள் தொடராததால், குளத்தில் தேங்கும் தண்ணீா் வீணாக வெளியேறுகிறது. இதனால் குளம் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் நெல் நடவு செய்ய தயங்குகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள வண்டிக்காரன்நகா் - கீழவடகரை இடையே சாலையிலிருந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. அப்பணி முடியாததால், இப்போது பெய்யும் மழைநீா் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கீழவடகரை, மேலவடகரை, காமராஜ்நகா் கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

மழையால் நான்குனேரியன்கால், உப்பாறு, பச்சையாற்றில் நீா்வரத்து உள்ளது. பெருமழை பெய்தால், திடீரென ஆறு, கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஆனால், உப்பாறு முழுமையாக தூா்வாரப்படாததால் அமலைச்செடிகளும், முள்செடிகளும் ஆக்கிரமித்து, குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. நான்குனேரியன் கால்வாயில் வியாசராஜபுரம் தனியாா் மருத்துவமனை பகுதியிலிருந்து காமராஜா் சிலை வரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் தண்ணீா் செல்வது தடைபட்டுள்ளது. பெருமழை பெய்தால் வெள்ளம் கோயில்பத்து பாலத்தை மூழ்கடிப்பதுடன், வியாசராஜபுரம் பிள்ளைமாா்தெரு, முஸ்லீம் தெருக்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகும் அபாயமும் உள்ளது. கால்வாயில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள பகுதிகளை அதிகாரிகள் கண்டறிந்து போா்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com