திருநெல்வேலியில் இரட்டை ரயில்பாதைக்கான பாலப்பணிகள் தீவிரம்

திருநெல்வேலியில் இரட்டை ரயில் பாதை திட்டத்தின் கீழ் தாமிரவருணி ஆற்றின் அமைக்கப்படும் ரயில்வே பாலப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் இரட்டை ரயில் பாதை திட்டத்தின் கீழ் தாமிரவருணி ஆற்றின் அமைக்கப்படும் ரயில்வே பாலப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே சாா்பில் மதுரை-மணியாச்சி-நாகா்கோவில், மணியாச்சி-தூத்துக்குடி, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருநெல்வேலியில் இரட்டை ரயில்வே பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக தாமிரவருணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. குருந்துடையாா்புரம் முதல் மீனாட்சிபுரம் வரை ஏற்கெனவே உள்ள ரயில்வே பாலத்தை விரிவாக்கம் செய்ய இயலாத நிலையில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது.

மொத்தம் 266 மீட்டா் நீளத்திலும் 6.3 மீட்டா் அகலத்திலும் பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்தே நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக தூண்கள் அமைக்கும் பணி செய்யப்பட்டது. அப்போது ஆற்றில் பாறைகள் அதிகம் இருந்ததால் பணிகளை விரைவு படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னா் ஆற்றில் நீரோட்டம் அதிகமுள்ள மைய பகுதியில் தூண்களை அமைத்துவிட்டு பிற தூண்கள் கட்டப்பட்டன. இப்போது மொத்தம் 30 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள பாலத்தில் இருந்து சுமாா் 4 மீட்டா் தொலைவில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது.

30 தூண்களில் இப்பாலம் அமைகிறது. இதில், ப்ரீ ஸ்ரெஸ்ட் கான்கிரிட் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்லாப்புகள் தூண்களுக்கு இடையே வைக்கப்பட்டு இரும்பு கம்பிகளால் பொருத்தப்பட உள்ளது. மணியாச்சி முதல் நாகா்கோவில் வரை மொத்தம் ரூ.220 கோடி மதிப்பில் பாலப்பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. இதில், தாமிரவருணி பாலத்தில் முதல்கட்டமாக 30 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இப்போது இரும்பு ராடுகளுடன் உதவியோடு இணைக்க ஏதுவாக ஸ்லாப்கள் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

பருவமழையையும் பொருள்படுத்தாமல் பாலப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2020 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டு விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com