"படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை'

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்குமாறு விவசாயிகளுக்கு ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 12,000 ஹெக்டேர் பரப்பில் குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஆலங்குளம் ஆகிய வட்டாரங்களில் ராபி பருவத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு படைப்புழு தாக்குதலினால் மக்காச்சோளப் பயிரில் அதிக மகசூல் இழப்பு ஏற்பட்டது. நடப்பு பருவத்தில் மக்காச்சோள பயிரினை படைப்புழு தாக்குதலில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கோடை உழவு செய்யும்போது கடைசி உழவில் ஏக்கருக்கு 100 கிலோ நயம் வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். இதன்மூலம் மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படும். விவசாயிகள் பயிர் விதைத்த முதல் வாரம் தொடங்கி 3 அல்லது 4 தினங்கள் இடைவெளியில் வயல் முழுவதும் நடந்து, கண்காணித்து இலையின் மேல்புறம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டைக் குவியல்கள், இளம் புழுக்கூட்டங்களை அழிக்க வேண்டும். 
விதைநேர்த்தி செய்வதன் மூலம் ஆரம்பகட்ட பாதிப்பை தவிர்க்கலாம். ஒரு கிலோ விதைக்கு பேவேரியா பேசியானா 10 கிராம் அல்லது தையோ மீத்தாக்ஸம் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். வயலைச் சுற்றிலும் வரப்புப் பயிராக சூரியகாந்தி, எள், தட்டைப்பயறு ஆகியவற்றையும், ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு போன்றவற்றையும் பயிரிட வேண்டும். இதனால் படைப்புழுவின் தாய்ப் பூச்சி முட்டையிடுதல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
10 வரிசைக்கு 1 வரிசை விதைக்காமல் இடைவெளி விட வேண்டும். நெருக்கமாக விதைத்தால் படைப்புழு எளிதில் பரவும். மானாவாரி பயிரில் வரிசைக்கு வரிசை 40 செ.மீ., பயிருக்கு பயிர் 25 செ.மீ. இடைவெளி விட வேண்டும். இறவைப் பயிரில் வரிசைக்கு வரிசை 60 செ.மீ., பயிருக்கு பயிர் 25 செ.மீ. இடைவெளி விட வேண்டும். இது பயிரை கண்காணிக்கவும், மருந்து தெளிக்கவும் எளிதாக இருக்கும்.
விதைத்த 10 முதல் 30 நாள்களில் அசாடிராக்டின் 1 சதவீதம் இசி 20 மி.லி. அல்லது தையோடிகார்ப் 20 கிராம் அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 4 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.  விதைத்த ஒரு வாரத்திற்குள் அதிக அளவில் ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்க இனக்கவர்ச்சிப்பொறி ஏக்கருக்கு 20 என்ற அளவில் வைக்க வேண்டும்.
விதைத்த 40 முதல் 25-ஆவது நாளில் ஸ்பைனிடோரம் 5 மி.லி. அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலியே 80 கிராம் அல்லது குளோராண்டிராணிலிபுரோல் 4 மி.லி. அல்லது புளுபெண்டியமைடு 4 மி.லி. அல்லது நொவல்யூரான் 15 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, குருத்துப் பகுதியில் படுமாறு தெளிக்க வேண்டும். மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் மேற்கண்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் படைப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்த்திடலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com