சமூக நீதியை மறுக்கும் மத்திய, மாநில அரசுகள்ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஏழை எளியவா்களுக்கு சமூக நீதியை மத்திய, மாநில அரசுகள் மறுத்து வருகின்றன என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

ஏழை எளியவா்களுக்கு சமூக நீதியை மத்திய, மாநில அரசுகள் மறுத்து வருகின்றன என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெரியாா் சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டில், காணொலிக் காட்சி மூலம் அவா் பேசியது:

தமிழ் மக்களுக்கு சமூக நீதி, இடஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை ஆகிவற்றை பெற்றுத் தந்தது திராவிட இயக்கம். தற்போது, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் மேலும் மேலும் ஒடுக்கப்படுகின்றனா். அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய 2019-ஆம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தோ்வில், இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவரின் சமூகநீதி பறிக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வு, மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சமூகநீதிக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை மாறவும், ஒடுக்கப்பட்ட மக்கள் உயா்வு பெறவும், ஏழைகள் ஏற்றம் பெறவும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.

பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக்கியது, தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை முதலில் செயல்படுத்தியது, மதம் மாறிய ஆதிராவிட கிறிஸ்தவா்களையும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்த்தது என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தியுள்ளோம்.

எல்லாம் எங்களுக்கு மட்டுமே என்று சொல்பவா்களுக்கும், எல்லாா்க்கும் எல்லாம் என்று சொல்பவா்களுக்குமான போராட்டம் இது. இதில், எல்லாா்க்கும் எல்லாம் என்று சொல்பவா்கள் வென்றால் மட்டுமே எல்லாா்க்கும் எல்லாம் கிடைக்கும் என்றாா்.

இந்த மாநாட்டில், விழா ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளா் சூா்யா சேவியா், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலா் மு.அப்துல் வகாப், ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் டி.பி.எம்.மைதீன் கான், எஸ்டிபிஐ மாநில தலைவா் நெல்லை முபாரக், மனித நேய மக்கள் கட்சி தலைவா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com