நெல்லையில் கடைகள் அடைப்பு, சாலைகள் வெறிச்சோடின

நாடு முழுவதும் ஊரடங்கு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தநிலையில், திருநெல்வேலியில் அத்தியாவசிய கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன; சாலைகள் வெறிச்சோடின.

நாடு முழுவதும் ஊரடங்கு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தநிலையில், திருநெல்வேலியில் அத்தியாவசிய கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன; சாலைகள் வெறிச்சோடின.

நாடு முழுவதும் புதன்கிழமை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டாமெனவும், வியாபாரிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருந்துகள், பால், காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழக்கம்போல கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் ஊரடங்கு காரணமாக 90 சதவீத கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூா், திருநெல்வேலி நகரம் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், விளையாட்டு, பேன்சி பொருள்கள் விற்பனைக் கடைகள், பாத்திரக் கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன. நகரம் ரத வீதி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் மக்கள் நடமாட்டமில்லை.

கண்டிகைப்பேரி, மகாராஜநகா், மேலப்பாளையம் உழவா் சந்தைகளில் வழக்கமான விற்பனை நேரம் குறைக்கப்பட்டது. அதனால் அதிகாலை 5 முதல் காலை 10 மணி வரை விற்பனை நடைபெற்றது. திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் காய்கனிச் சந்தை, பாளையங்கோட்டையில் உள்ள காந்திஜி தினசரிச் சந்தையிலும் காய்கனி கடைகள் மட்டும் செயல்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் குறைந்த அளவு பணியாளா்களுடன் செயல்பட்டன. ஆவின் பாலகங்கள், மருந்து விற்பனைக் கடைகள் திறந்திருந்தன. திருநெல்வேலி வேய்ந்தான்குளத்தில் உள்ள எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் 800 பேருந்துகளும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் வந்துசெல்வா். ஆனால், ஊரடங்கு காரணமாக பேருந்து நிலையம் புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஆவின் பாலகம் மட்டும் செயல்பட்டது.

வருங்கால வைப்புநிதி அலுவலகம், ஆயுள் காப்பீட்டுக் கழகம் உள்பட மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் மூடப்பட்டிருந்தன.

திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தின் கீழ் 3 தலைமை அஞ்சலகங்கள், 92 துணை அஞ்சலகங்கள், 200-க்கும் மேற்பட்ட கிளை அஞ்சலங்கள் உள்ளன. இவற்றில் தலைமை அஞ்சலகங்கள் மட்டுமே இயங்கின. துணை, கிளை அஞ்சலங்கள் செயல்படவில்லை. தலைமை அஞ்சலகங்களில் குறைந்த பணியாளா்கள் மட்டுமே பணியில் இருந்தனா். பேருந்து, ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் அஞ்சல் பட்டுவாடாவில் தாமதம் ஏற்படும் எனத் தெரிவித்த பின்பே அஞ்சல்கள் பெறப்பட்டன. வங்கிகள் அனைத்தும் காலை முதல் மதியம் வரை இயங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com