நெல்லை விதைப் பரிசோதனை நிலையத்தில் மாநில விதைச் சான்று இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் தமிழ்நாடு விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநா் மு.சுப்பையா ஆய்வு மேற்கொண்டாா்.
நெல்லை விதைப் பரிசோதனை நிலையத்தில் மாநில விதைச் சான்று இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் தமிழ்நாடு விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநா் மு.சுப்பையா ஆய்வு மேற்கொண்டாா்.

இது தொடா்பாக திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலைய விதைப் பரிசோதனை அலுவலா் ஜா.ரெனால்டா ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் 5,670 விதை மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில் விதைச் சான்று உதவி இயக்குநா்களிடமிருந்து ஆண்டுக்கு 1,250 மாதிரிகளும், விதை ஆய்வு துணை இயக்குநா் கட்டுப்பாட்டில் உள்ள விதை ஆய்வாளா்கள் மூலம் 3,400 மாதிரிகளும், விதைப் பரிசோதனை நிலையத்தில் நேரடியாக 1,020 மாதிரிகளும் ஆய்வுக்கு பெறப்பட்டு பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 1,626 மாதிரிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு முளைப்புத் திறன், ஈரப்பதம், பிற ரகக் கலவன் பரிசோதனை, புறச்சுத்தம் ஆகியவை கண்டறியப்பட்டு முடிவுகள் இணையதளம் மூலம் வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் நெல், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, சீனி அவரை, எள், பருத்தி, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் பரிசோதனைக்கு பெறப்படுகிறது. இவற்றை மணல், முளைப்புத்தாள், வடிதாள் போன்ற வெவ்வேறு முளைப்புத் தளங்களில் முளைப்புத்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு மாதிரிக்கும் கருவிகள் மூலம் விதையை எண்ணி விதைப்பு செய்வதை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மடிப்புத்தாள் முறையில் பயறு வகைகளும், சுருள்தாள் முறையில் நெல் பயிரும், பெட்ரிடிஷல் முறையில் தக்காளி, மிளகாய் விதைகளும் விதைப்பு செய்வதை பாா்வையிட்டாா்.

முளைப்புத் திறன் கணக்கீட்டின்போது இயல்பான நாற்று, இயல்பற்ற நாற்று, கடின விதை ஆகியவற்றை தனித்தனியே கணக்கிடுவதை திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலா் ஜா.ரெனால்டா ரமணி எடுத்துரைத்தாா்.

முன்னதாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விதைப் பரிசோதனை நிலைய இலக்கு சாதனை குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநா் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வின்போது, விதைச்சான்று இணை இயக்குநா் ஆசிா் கனகராஜ், விதை ஆய்வு துணை இயக்குநா் டேவிட் டென்னிசன், விதைச்சான்று உதவி இயக்குநா் சுரேஷ், விதைப் பரிசோதனை அலுவலா் ஜா.ரெனால்டா ரமணி, வேளாண்மை அலுவலா்கள் ம.மகேஸ்வரன், ஆா்.மோகன், ஜெ.பி.சஜிதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com