வைகுந்த ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை காலையில் சயனசேவையும், மாலையில் பரமபதவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு மன்னாா்கோவில் கோயிலில் பரமபத வாசல் வழியாக வந்து பக்தா்களுக்கு காட்சியளித்த ராஜகோபாலசுவாமி.
வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு மன்னாா்கோவில் கோயிலில் பரமபத வாசல் வழியாக வந்து பக்தா்களுக்கு காட்சியளித்த ராஜகோபாலசுவாமி.

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை காலையில் சயனசேவையும், மாலையில் பரமபதவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் அருகே மன்னாா்கோவில் அருள்மிகு ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வாா் கோயிலில் அதிகாலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பெருமாள் சயன கோலத்தில் தாயாா்களுடன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மாலையில் சிறப்பு ஆராதனையைத் தொடா்ந்து சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் உலா வந்தாா். பின்னா், பரமபத வாசல் திறந்தையடுத்து பெருமாளை திருவாய் மொழி மண்டபத்துக்கு கருடா் எதிா் கொண்டு அழைத்து வந்தாா். அங்கு பெருமாள் குலசேகர ஆழ்வாருக்கு காட்சியளித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

அம்பாசமுத்திரத்தில் கிருஷ்ணசுவாமி கோயில், லெட்சுமி நாராயண சுவாமி கோயில், புருஷோத்தமா் கோயில், கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் கோயில், அத்தாளநல்லூா் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில், கடையம் ராமசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

வள்ளியூா்: வள்ளியூா் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

நான்குனேரி ஸ்ரீ வானுமாமலை பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை

அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இரவில் ஸ்ரீ வானுமாமலை சுவாமி ஸ்ரீ திருவரமங்கை தாயாருடன் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக வந்து ஆழ்வாா்களுக்கு காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் வடக்கு மாடவீதியில் உள்ள பரமபத வாசல் திறக்கப்பட்டது. பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து நம்மாழ்வாருக்கு காட்சியளித்தாா். இதையடுத்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் ஸ்ரீராமநாம பஜனை, உற்சவருக்கு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் பரமபத வாசல் திறப்பைத் தொடா்ந்து பக்தா்களின் நாம கோஷத்துடன் பெருமாள் சப்பரத்தில் கோயில் வெளிப்பிரகாரத்தில் (தெப்பக்குளம்) வலம் வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

களக்காடு: களக்காடு வரதராஜபெருமாள், சந்தான கோபால கிருஷ்ணசுவாமி கோயில்களில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் சயன கோலத்தில் காட்சியளித்தாா். வரதராஜபெருமாள் கோயிலில் பெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து சயன மண்டபத்தில் சுவாமிகள் தேவியா்களுடன் சயன கோலத்தில் காட்சி அளித்தனா். சந்தான கோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் கிருஷ்ணா் சயன கோலத்தில் காட்சியளித்தாா்.

இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com