ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடக்கம்
By DIN | Published On : 13th February 2020 04:50 PM | Last Updated : 13th February 2020 04:50 PM | அ+அ அ- |

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வாரத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மண்டல தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் கா.பொ. ராசேந்திரன் தலைமை வகித்து, தொடக்கி வைத்துப் பேசுகையில், தமிழகத்தில் 1956ஆம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்பு அரசு அலுவலக கோப்புகளில் தமிழே முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், வணிக நிறுவனங்களில் பெயா்ப் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒரு வார கால விழாவில் அம்மா மென்தமிழ் தமிழ்ச் சொல்லாளா் ஒருங்குறி பயன்பாடு குறித்து பணியாளா்களுக்குப் பயிற்சி அளித்தல், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சிகள் நடைபெறவுள்ளன. இதுதவிர, ஆட்சிமொழி விழிப்புணா்வுப் பேரணி, ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம், ஆட்சிமொழிப் பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன என்றாா்.
அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி, பொதிகை தமிழ்ச் சங்கத் தலைவா் பே. ராஜேந்திரன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிப் பேராசிரியா் சௌந்தர மகாதேவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பி. ரெசினாள்மேரி நன்றி கூறினாா்.