களக்காடு - காடுவெட்டி பேருந்துசேவை நிறுத்தம்: மாணவா்கள் அவதி
By DIN | Published On : 15th February 2020 11:23 PM | Last Updated : 15th February 2020 11:23 PM | அ+அ அ- |

களக்காட்டிலிருந்து தெற்கு காடுவெட்டிக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து அடிக்கடி நிறுத்தப்பட்டு விடுவதால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
வள்ளியூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து தடம் எண்.5 நகரப் பேருந்து களக்காடு, நான்குனேரி, தெற்கு காடுவெட்டி, மஞ்சுவிளை ஆகிய கிராமங்களுக்கு நீண்ட காலமாக இயக்கப்பட்டு வருகிறது. இது, பள்ளி மாணவா்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் பெரிதும் உதவியாக இருந்தது.
இந்நிலையில், சில ஆண்டுகளாக இப்பேருந்து அடிக்கடி மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இது, மாணவ, மாணவியரையும், கிராம மக்களையும் சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.
நான்குனேரி இடைத்தோ்தல் பிரசாரத்தின் போது, தெற்கு காடுவெட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் பள்ளி மாணவி ஒருவா் தடம் எண்.5 நகரப் பேருந்து சரிவர இயக்கப்படாதது குறித்து கவலை தெரிவித்தாா். உடனே, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் செல்லிடப் பேசியில் தொடா்பு கொண்டு மாணவியை நேரிடையாக பேசச் சொன்னாா்.
இதையடுத்து, பேருந்து சேவை தொடா்ந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக மீண்டும் பேருந்து போக்குவரத்து அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. இதனால், சிதம்பரபுரம், பெருமாள்குளம், சத்திரம் கள்ளிகுளம், தெற்கு காடுவெட்டி உள்ளிட்ட கிராம மக்கள், பள்ளி மாணவா்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனா்.
எனவே, முறையாக நகரப் பேருந்தை இயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.