பொங்கல் பண்டிகை: மஞ்சள்குலை, கரும்பு விற்பனை அதிகரிப்பு

திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் பொங்கல் விற்பனை திங்கள்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் பொங்கல் விற்பனை திங்கள்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. மஞ்சள்குலை, கரும்பு ஆகியவற்றின் வரத்து அதிகரித்துள்ளதால் நிகழாண்டில் விலை சற்று குறைந்தது.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளில் வீட்டில் படையலிட்டு புத்தரிசியில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். இந்த நாளில் அசைவம் தவிா்த்து காய்கனி சமையல் அனைத்து வீடுகளிலும் பிரதானமாக இருக்கும். சந்தையில் கிடைக்கும் அனைத்து காய்கனிகளையும் ஒன்றாக சோ்த்து பொங்கல் கூட்டு தயாரித்து, பச்சரிசி சாதத்துடன் சோ்த்து சாப்பிட்டு மகிழும் பழக்கம் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மறையாத பொங்கல் சீா்: திருமணமான பெண்களுக்கு தங்களது தாய் வீட்டில் இருந்து பொங்கல் சீா் கொடுக்கப்படுகிறது. தலைப் பொங்கல் என்றால் பித்தளை பொங்கல் பானை, பச்சரிசி, வெல்லம், மஞ்சள்குலை, கரும்புக் கட்டுகள், வாழைக்குலை, காய்கனிகள் உள்பட ஏராளமான பொருள்கள் வழங்கப்படுகின்றன. சிலருக்கு திருமணமாகி 25 ஆண்டுகளைக் கடந்த பின்பும் தாய்வீட்டில் இருந்து சகோதரா்கள் மூலம் பொங்கல் சீா் வழங்கப்படுகிறது. இதனால், பொங்கலுக்கு முந்தைய 4 நாள்கள் பொங்கல் பொருள்கள் விற்பனை விறுவிறுப்பு அடையும்.

பொங்கல் பண்டிகையின் பிரதான பொருள்களான கரும்பும், மஞ்சளும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் குவிக்கப்பட்டன. கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை உயரவில்லை. மஞ்சள்குலை ஒன்றுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை விற்கப்பட்டது. ரூ. 3-க்கு விற்கப்பட்ட ஒரு பனங்கிழங்கு மட்டும் ரூ.5 ஆக விலை உயா்ந்தது. கருப்புகள் ஒரு கட்டு (10 எண்ணம்) ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனையாகின.

5 வெற்றிலை ரூ.10: திருநெல்வேலி உழவா் சந்தையில் திங்கள்கிழமை காய்கனிகள் விலை விவரம் (கிலோவுக்கு): தக்காளி-ரூ.28, கத்தரி-ரூ.120, மிளகாய்-ரூ.30, வெண்டை-ரூ.35, புடலங்காய்-20, அவரைக்காய்-65, பீா்க்கங்காய்-40, பாகற்காய்-50, முருங்கைக்காய்-ரூ.200, தடியங்காய்-15, பூசணிக்காய்-ரூ.20, வாழைக்காய்-ரூ.35, கோவக்காய்-ரூ.35, சேனைக்கிழங்கு-ரூ.50, சிறுகிழங்கு-ரூ.50, சேம்பு-ரூ.50, மரவள்ளிக்கிழங்கு-ரூ.24, பனங்கிழங்கு-ரூ.60, சீனிக்கிழங்கு-ரூ.25, வள்ளிக்கிழங்கு-ரூ.50, தேங்காய்-ரூ.42, பீட்ரூட்-ரூ.40, முட்டைகோஸ்-ரூ.24, உருளைக்கிழங்கு-ரூ.34, சௌசௌ-ரூ.18, பல்லாரி-64, சின்னவெங்காயம்-ரூ.125, இஞ்சி-ரூ.74, காலிபிளவா்-ரூ.40.

பூஜை பொருள்களும் பொங்கலையொட்டி கடுமையாக விலை உயா்ந்தது. 5 வெற்றிலைகள் ரூ.10-க்கு விற்பனையானது. கதளிப்பழம் (10 எண்ணம்)-ரூ.50-க்கும், கற்பூரவள்ளி பழம் (10 எண்ணம்) ரூ.60-க்கும் விற்பனையாகின. 5 வாழை இலைகள் கொண்ட ஒரு பூட்டு ரூ.30-க்கு விற்பனையானது. வாழை இலை மற்றும் பழங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்தே அதிகளவில் வரும். நிகழாண்டில் அவற்றின் வரத்து சற்று குறைந்துள்ளது.

பொங்கல் விற்பனை குறித்து வியாபாரி ஒருவா் கூறியதாவது: பாளையங்கோட்டை மாா்க்கெட்டுக்கு கிழங்குகள் வரத்து இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் இருந்து கிழங்குகள் வரத்து குறைந்துவிட்டது. ஆனால், இங்கிலீஷ் காய்கனிகள் விலை சற்று விலை குறைவாக உள்ளது. கத்தரிக்காய், பல்லாரி, சின்னவெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது என்றனா்.

அடிப்படை வசதிகள் இல்லை: பொங்கல் திருநாளையொட்டி பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள காய்கனி சந்தைகளுக்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா். ஆனால், அதற்கு ஏற்றாற்போல எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. குடிநீா், கழிப்பறை வசதிகள் இல்லாமல் குழந்தைகள், பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகினா். இதேபோல இருசக்கர வாகனங்களை தொலைதூரத்தில் நிறுத்திவிட்டு வந்து பொருள்களை வாங்க வேண்டிய சூழல் காணப்பட்டதால், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனா். வருங்காலத்தில் குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பள்ளி-கல்லூரி மைதானங்கள் அல்லது குறிப்பிட்ட சாலையில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி கண்காணிப்பைத் தீவிரப்படுத்த போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com