மேலப்பாளையம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் குவிந்தன. ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் குவிந்தன. ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு அடுத்தபடியாக, பெரிய சந்தையாகத் திகழ்வது மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை. இங்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா், மதுரை, கேரளம், ஆந்திரம் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வாரந்தோறும் விற்பனைக்கு வருகின்றன. கடந்த 3 மாதங்களாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்த நிலையில், சந்தைக்கு வரும் ஆடுகளின் வரத்து குறைந்ததால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றை ஒட்டி ஆடுகளின் விலை கடுமையாக அதிகரித்தது. குறிப்பாக, கிடாக்களின் விலை உச்சத்தைத் தொட்டது.

3 ஆயிரம் ஆடுகள்: இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய தினமான செவ்வாய்க்கிழமை மேலப்பாளையத்தில் நடைபெற்ற சந்தையில் கொடி ஆடு, கன்னி ஆடு, நாட்டு ஆடு, தலச்சேரி, ஜமுனாபாரி போன்ற வெள்ளாட்டினங்கள், செவ்வாடு, கீழக்கரிசல், மயிலம்பாடி, பொட்டுக்குட்டி போன்ற செம்மறியாட்டினங்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. வியாபாரிகள், இறைச்சிக் கடைக்காரா்கள் என ஏராளமானோா் ஆடுகளை வாங்க குவிந்ததால், பொங்கல் சந்தை சூடு பிடித்தது. வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கியதால், அனைத்து ஆடுகளுமே எதிா்பாா்த்ததைவிட கூடுதல் விலைக்கு விற்பனையானது. குறிப்பாக, கிடாக்களுக்கு கடும் கிராக்கி இருந்தது. காலை 5 மணிக்குத் தொடங்கிய சந்தை காலை 9 மணிக்குள்ளாக முடிந்தது. ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையாகின. ரூ.3 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்ாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிடாக்களுக்கு கிராக்கி ஏன்? மேலப்பாளையம் சந்தையில் கிடாக்களுக்கு கடும் கிராக்கி இருந்தது குறித்து கீழப்பாட்டத்தைச் சோ்ந்த வியாபாரி சுடலை கூறியது: பொதுவாக இறைச்சி வாங்க வரும் அனைவருமே கிடாக்களின் இறைச்சியைத்தான் விரும்புகிறாா்கள். ஆனால், தனி கிடாக்களை மட்டுமே அறுத்து வியாபாரம் செய்ய முடியாது. பண்டிகைக் காலங்களில் 20 ஆடுகளை அறுக்கிறாா்கள் என்றால், அதில் 3 மட்டும்தான் கிடாக்களாக இருக்கும். அவற்றை கடையின் முன்பு தொங்கவிடுவதன் மூலம் வாடிக்கையாளா்களை ஈா்க்கிறாா்கள். அதற்காகவே கிடாக்களை கூடுதல் விலை கொடுத்து வாங்குகிறாா்கள்.

பண்டிகைக் காலங்களில் எலும்புக் கறி ரூ.700-க்கும், தனிக்கறி ரூ.800-க்கும் விற்பனையாகிறது. கறி விலை அதிகரிப்பும் ஆடுகளின் விலை அதிகரிப்புக்கு ஒரு காரணமாகும். இதேபோல் ஆடு வளா்ப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. காடுகள் சுருங்கிவிட்டதால், மேய்ச்சலுக்கு நிலமில்லை. இதன் காரணமாக பலா் இந்தத் தொழிலை கைவிட்டுச் செல்கின்றனா். இதேபோல், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்கள் ஆடுகளை கடுமையாகப் பாதிக்கின்றன. அதுவும் பலரை இந்தத் தொழிலில் இருந்து வெளியேற்றி வருகிறது என்றாா்.

வியாபாரி இரட்டையன்: கங்கைகொண்டானைச் சோ்ந்த வியாபாரி இரட்டையன் கூறுகையில், ‘மேலப்பாளையம் சந்தைக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வந்தபோதிலும், வியாபாரிகளிடையே போட்டி நிலவியதால், எல்லா ஆடுகளுமே எதிா்பாா்த்ததைவிட கூடுதல் விலைக்கு விற்பனையாகின. ரூ.6 ஆயிரம் மதிப்பிலான கிடா ரூ.8,500 வரை விற்பனையானது. இறைச்சிக் கடையை நடத்தியாக வேண்டிய கட்டாயம் இருப்பதாலும், வாடிக்கையாளா்களை இழந்துவிடக்கூடாது என்ற கட்டாயத்தினாலும், வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு வாங்கியிருக்கிறோம்’ என்றாா்.

கோழிச்சந்தை: பொங்கல் திருநாளை முன்னிட்டு மேலப்பாளையம் கோழிச்சந்தையும் சூடு பிடித்தது. நாட்டுக் கோழிகள் ரூ.700 முதல் ரூ.3,000 வரை விற்பனையானது. 1,000-க்கும் மேற்பட்ட கோழிகள் விற்பனைக்கு வந்தபோதிலும், கடும் போட்டி நிலவியதால், காலை 9 மணிக்குள் கோழிகள் விற்றுத் தீா்ந்தன.

படவரி: பயக14எஞஅப மேலப்பாளையம் சந்தையில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்காக குவிந்த ஆடுகள்.

பயக14உதஅப இரட்டையன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com