குடியரசு தினத்தில் விதிமுறை மீறல்: 93 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
By DIN | Published On : 27th January 2020 10:22 AM | Last Updated : 27th January 2020 10:22 AM | அ+அ அ- |

குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காமல் பணி வழங்கியதாக, திருநெல்வேலி மாவட்டத்தில் 93 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருநெல்வேலி மாவட்ட உதவி ஆணையா்(அமலாக்கம் -பொறுப்பு) சு.சுடலைராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை தொழிலாளா் ஆணையா் இரா.நந்தகோபால் உத்தரவின் பேரில், மதுரை கூடுதல் தொழிலாளா் ஆணையா் எம்.ராதாகிருஷ்ண பாண்டியன், திருநெல்வேலி மண்டல தொழிலாளா் இணை ஆணையா் சி.ஹேமலதா வழிகாட்டுதல்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் குடியரசு தினத்தில் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்-பொறுப்பு) தலைமையில் 125 நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது விருப்பத்தின் பேரில் பணிபுரியும் ஊழியா்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்போ அளிக்க வேண்டும். இதற்கான ஆவண நகலை நிறுவனத்தின் அறிவிப்பு பலகையிலும், மற்றொரு நகலை தேசிய விடுமுறைக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட தொழிலாளா் துணை அல்லது உதவி ஆய்வாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது விதி.
ஆனால், 93 நிறுவனங்களில் இந்த விதியைப் பின்பற்றாதது ஆய்வில் தெரியவந்ததால் அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.